‘பெர்சே 3.0ன் போது பத்திரிக்கையாளர்கள் தங்களைப் போர்க்களப் பகுதிக்குள் நிறுத்திக் கொண்டனர்’

தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி அண்மையில் நடத்தப்பட்ட பெர்சே 3.0 பேரணியின் போது ஊடகவியலாளர்கள் போலீஸ்காரர்கள் அடங்கிய கும்பல்களினால் அடிக்கப்பட்ட சம்பவங்களுக்கு பத்திரிக்கையாளர்களுடைய நடத்தையும் காரணம் என போலீஸ் இன்று கூறிக் கொண்டது.

“வழிகாட்டிகளின் கீழ் செய்திகளைச் சேகரிக்கும் போது அவர்கள் தங்களைப் போர்க்களப் பகுதிக்குள் நிறுத்திக் கொள்ளக் கூடாது. பெர்சே-யின் போது அவர்கள் தங்களைப் போர்க்களப் பகுதிக்குள் நிறுத்திக் கொண்டனர்.”

“அவர்கள் அதிகாரிகளுக்கும் பேரணி பங்கேற்பாளர்களுக்கும் இடையில் நின்று கொண்டிருந்தனர். கலவரம் மூண்டால் அவர்கள் அந்த இரு தரப்புக்கும் இடையில் சிக்கிக் கொள்வர்,” என ஏசிபி ஜமாலுதின் அப்துல் ரஹ்மான் கூறினார்.

ஏப்ரல் 28ல் நிகழ்ந்த பெர்சே பேரணியின் போது அதிகாரிகள் மனித உரிமை அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது மீது சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் பொது விசாரணையில் இன்று அவர் அவ்வாறு வாதாடினார்.

அவர் அந்த விசாரணையில் 27வது சாட்சியான வி அன்பழகனை குறுக்கு விசாரணை செய்தார். அன்பழகன் தேசியப் பத்திரிக்கையாளர் சங்கத் தலைமைச் செயலாளரும் ஆவார்.

அண்மையில் தேசியப் பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்ட வழிகாட்டிகள் ஜமாலுதின் கூறியதை குறிப்பிட்டுள்ளதை ஒப்புக் கொண்ட அன்பழகன், பெர்சே 3.0 போர்க்களப் பகுதிக்குச் சமம் எனக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ளவில்லை.

“பத்திரிக்கையாளர்கள் இரண்டு தரப்புக்கும் இடையில் சிக்கிக் கொண்டாலும் போலீசார் அவர்களை தாக்கியிருக்கக் கூடாது,” என அந்த தேசியப் பத்திரிக்கையாளர் சங்க அதிகாரி வலியுறுத்தினார்.