உங்கள் கருத்து: “இந்திய மலேசியர் ஒருவர் துணைப் பிரதமராக இருக்க வேண்டும் என்ற நியாட்டின் அணுகுமுறை தப்பு.பூனை கருப்பாய் இருந்தால் என்ன, வெளுப்பாய் இருந்தால் என்ன, அது பூனையைப் பிடிக்க வேண்டும்.அதுதான் முக்கியம்”.
நியாட்டின் பொதுத் தேர்தல் கோரிக்கைகள்- இந்தியமலேசியர் துணப் பிரதமராக வேண்டும்
பீரங்கி: இன-அடிப்படை அரசியலால் ஆகப் போவது ஒன்றுமில்லை என்பதை மலேசியர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.அதை வைத்து எல்லா இனங்களிடையேயும் நிலவும் வறுமைக்குத் தீர்வு காண இயலாது.அதனால்,சிறுபான்மையினர் விளிம்புநிலைக்குத் தள்ளப்படும் நிலைதான் உருவாகிறது.அம்னோ-பின் இனப்பாகுபாட்டுக் கொள்கையால் முழுமையாக பாதிக்கப்பட்டவர்கள் இச்சிறுபான்மையினரே.
மேல்தட்டில் இருப்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் அவர்களே எடுத்துக்கொண்டு தங்கள் ஏழைச் சகோதரர்களைத் தெருவில் விட்டு விடுவார்கள்.பிஎன் ஆட்சியில் மஇகா எப்படி இந்தியர்களைப் ‘பார்த்துகொண்டது’ என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்.ஒவ்வொரு இனத்திடமும் அதன் இனத்தவரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் இதுதான் நடக்கும்.
நியாட், இனத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இனத்தைத் தாண்டி அதனால் சிந்திக்க முடியவில்லை.அதன் தலைவர்களும் பதவிக்கு வந்தால் அம்னோ-பிஎன் சுயநலமிகள் என்ன செய்தார்களோ அதைத்தான் செய்வார்கள்.
ராஜா சோழன்: அப்பாடா,இப்போதாவது நம்பத்தக்கவர்களும் அரசியல்-சார்பற்றவர்களுமான தஸ்லிம் முகம்மட் இப்ராகிம், அம்பிகா ஸ்ரீநிவாசன் போன்றோர் இந்தியர் உரிமைகளுக்காக போராட வந்திருக்கிறார்களே என்று அகமகிழ்கிறேன்.சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசியல்வாதிகளிடம் மட்டுமே விட்டு விடக் கூடாது.
ஃபாஸ்: எல்லாவற்றையும் இன அடிப்படையிலேயே சிந்தித்துக் கொண்டிருந்தால் மலேசியர் என்ற முறையில் நாம் முன்னேற்றம் காண மாட்டோம்.இது, திறமையை ஊக்குவிக்கும் கொள்கைக்கு முரணானது.
இன அடிப்படையிலான அம்னோ-பின் சிந்தனைகளால் 54 ஆண்டுகள் வீணாகி விட்டன.
நியாயவான்: எல்லாத் தரப்புகளும் கோரிக்கைகளை அதுவும் இன ரீதியிலான கோரிக்கைகளை முன்வைப்பதை நிறுத்திக்கொண்டு பக்காத்தான் ரக்யாட்டை ஆதரிக்க வேண்டும். வெற்றிபெற்ற பிறகு நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கலாம்.
கோரிக்கைகளை முன்வைப்பதும் அதை வைத்துப் பேரம் பேசுவதும் நியாயமல்ல.நானும் ஒரு இந்திய மலேசியன் என்றாலும், இந்தியர் துணைப் பிரதமராக வேண்டும், இந்திய அமைச்சர்கள்-துணை அமைச்சர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளில் எனக்கு உடன்பாடில்லை.
குறிப்பிட்ட பதவிகளுக்குப் பொருத்தமானவர்கள் யாரோ அவர்களுக்கு அப்பதவிகள் கொடுக்கப்பட வேண்டும்.அதில் இனப்பாகுபாடு பார்க்கக் கூடாது. 55ஆண்டுகளில் ச.சாமிவேலுவும் மற்ற மஇகா தலைவர்களும் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். இந்தியர்களுக்காக அவர்கள் என்ன சாதித்தார்கள்?இந்திய அமைச்சர் ஒருவரால்தான் இந்தியர்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று சொன்னது யார்?
இன-அடிப்படையில் செயல்படுவதை உடனடியாக நிறுத்திக்கொண்டு தகுதிக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அஸ்லான் முகம்மட்: நியாட் செயலாளர் அருண் துரைசாமி அவர்களே,உங்கள் விருப்பங்களைப் பட்டியல் போடுவதை நிறுத்திக்கொண்டு முதலில் தேர்தலில் வெற்றி பெற முயலுங்கள்.
மலாய் நாட்டுப்புறக் கதையில் வரும் மாட் ஜெனின் போல் ஆகிவிடக்கூடாது.அவர் தென்னை மரம் ஏறிக்கொண்டிருந்தபோது இளவரசி பற்றி நினைத்துக்கொண்டே கைப்பிடியை விட்டு விடுவார்.
ஒரேமலேசியன்: நியாட் விளக்கக் கூட்டத்துக்குப் போயிருந்தேன்.பிஎன்னை ஆதரிப்பது சரிதானா என்ற கேள்வி பிறந்தது.அதே நேரத்தில் ‘ தெரியாத தேவதையைவிட தெரிந்த சைத்தானிடம்’ காரியங்கள் சாதிப்பது எளிதாக இருக்குமே என்ற எண்ணமும் ஏற்பட்டது.
ஆனால், நியாட்டின் கையேட்டைப் படிக்கப் படிக்க அந்த எண்ணம் மாறியது. மாற்றம் விரைவில் வர வேண்டும் என்றே விரும்புகிறேன்.
எக்ஸ் Wfw: சாபா, சரவாக்கைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கு ஒரு துணைப் பிரதமர்(டிபிஎம்) தேவை என்று கேட்க மாட்டார்களா?இந்தியர்களைவிட அதிக எண்ணிக்கை கொண்ட அவர்கள் எதற்காக அந்தப் பதவியை இந்தியர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்?
டிபிஎம் பதவி கொடுக்கப்படுவதால் ஓர் இனத்தின் வறுமைநிலை ஒழிந்துவிடும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?பதவிக்கு வந்துவிட்டால் இவர்களும் பிஎன் தலைவர்கள்போலவே செயல்படத் தொடங்கி விடுவார்கள்.
பூன்பவ்: இனவாத பிஎன்னை, குறிப்பாக அம்னோவை ஒழித்துக்கட்ட நானும் தயார்.ஆனால், ஒன்று.அடுத்த பிஎம் அல்லது டிபிஎம் இந்த இனத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்ற பேச்சே கூடாது.
அரசியல் இனத்தையும் சமயத்தையும் தாண்டி வர வேண்டும்.
அர்ச்சோன்: இந்தப் பதவிக்கு இந்த இனத்தவர்தான் என்ற நிலை கூடாது. மலாய்க்காரரா, சீனரா, இந்தியரா, கடாசானா, வேறு இனத்தவரா எந்த இனத்தவரைச் சேர்ந்தவராக இருந்தாலும் வேலையைச் சரியாக செய்கிறாரா என்பதுதான் முக்கியம்.
இந்தந்தப் பதவிகள் மலாய்க்காரர்களுக்குத்தான் என்று பிஎன் செயல்படத் தொடங்கியதன் விளைவுதான் இன்று இவ்வளவு பெரிய குளறுபடி.
யாகூ: நாம் ஏன் இந்நாட்டின் குடிமக்கள் அனைவரையும் மலேசியர்கள் என்று பார்ப்பதில்லை? ஒரு இனத்தைச் சேர்ந்தவர் மற்றொரு இனத்தாருக்கு நன்மை செய்வார் என்ற நம்பிக்கை வராமலிருப்பதற்குக் காரணம் என்ன?
ஆட்சிக்கு வரும் கட்சி, உலகளாவிய விழுமங்களைப் பின்பற்றி ஏழைகளுக்கு உதவி செய்தல், மலேசியர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது,, உண்மையான ஜனநாயகத்தைப் பின்பற்றுதல் முதலிய செயல்களில் ஈடுபட வேண்டும்.