மேலும் மூன்று பிஎன் பிரதிநிதிகள் விலகுவர்- லாஜிம்

பிஎன்னிலிருந்து விலகி, பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பியுஃபோர்ட் எம்பி லாஜிம் உகின், ஹரி ராயாவுக்குப் பின்னர் மேலும் மூன்று பிரதிநிதிகள் பிஎன்னிலிருந்து விலகுவர் என்று கூறினார்.

வரும் மாதங்களில், கட்டம் கட்டமாக அது நிகழும் என்று பிகேஆர் செய்தித்தாளான கெஅடிலான் டெய்லியிடம் அவர் தெரிவித்தார்.

“இது ஊகமோ, வதந்தியோ அல்ல, உண்மை.ஆனால், அவர்கள்  யார் என்பதை வெளியிட மாட்டேன்.

“அவர்களே கட்சிவிலகல் பற்றி அறிவித்து பக்காத்தானுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்”, என்றவர் கூறினார்.

முன்னாள் துணை அமைச்சருமான லாஜிம்,  பியுஃபோர்ட் அம்னோ தொகுதியின் 35செயல்குழு உறுப்பினர்களில் 18பேர் தம்மைப் பின்பற்றி பிஎன்னைவிட்டு விலகி, பக்காத்தானின் தோழமைக் கட்சியான பக்காத்தான் பெருபாஹான் சாபா(பிபிஎஸ்)வுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

“மேலும் சில சாபா அம்னோ கிளைத் தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களாக இருந்தவர்களும்கூட கட்சிவிலகத் திட்டமிட்டுள்ளனர்.

“பொருத்தமான நேரத்தில் அது பற்றி அறிவிக்கப்படும்”, என்றாரவர்.

இன்னொரு நிலவரத்தில், லாஜிமுடன் பிஎன்னைவிட்டு வெளியேறிய துவாரான் எம்பி வில்ப்ரட் பும்புரிங்,சாபாவில் கடாசான்-டுசுன்-மூருட் இனத்தவரிடையே அதிருப்தி அதிகரித்து வருவதாக ஞாயிற்றுக்கிழமை கோத்தா கினாபாலுவில் நடைபெற்ற டிஏபி விருந்தில் கூறினார்.

பிஎன்-னிலிருந்து விலகி அங்காத்தான் பெரூபாஹான் சாபா(ஏபிஎஸ்)கட்சியை அமைத்த பின்னர் நான்கு கடாசான்-டூசுன் பகுதிகளைச்  சுற்றிப்பார்த்தபோது இம்மனமாற்றத்தைக் கண்டதாக அவர் சொன்னார்.

“சீனர்களில் எண்பது விழுக்காட்டினர் ஆதரவை(பக்காத்தானுக்கு) மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.கடாசான்-டூசுன்-மூருட் வாக்காளர்களும் மாறிக் கொண்டிருக்கிறார்கள்”, என்றவர் கூறியதாக சீனமொழி நாளேடான சின் சியு டெய்லி செய்தி வெளியிட்டிருந்தது.

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்ததாகத் தெரிவித்த பும்புரிங், இருவரும் பொதுத் தேர்தலில் மாற்றரசுக் கட்சிகள் ஒன்று மற்றொன்றைத் தாக்கிப்பேசாதிருக்கவும் புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற ஒத்துழைக்கவும்  இணக்கம் கண்டிருப்பதாகவும் கூறினார்.