ஆதாரச் சட்ட மறு-ஆய்வு நஜிப்பின் பல்டிக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு

ஆதாரச் சட்டம் பகுதி 114ஏ அமைச்சரவையால் மறுஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்திருப்பது அவரது குட்டிக்கரணம் அடிக்கும் இயல்பைக் காண்பிக்கிறது என்கிறார்கள் பக்காத்தான் எம்பிகள்.

சமூகக் குழுக்களும், அரசியல் கட்சிகளும் மனித உரிமைப் போராளிகளும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அதை மறுஆய்வு செய்யப்போவதாக நஜிப் டிவிட்டர் பக்கத்தில் நேற்றுத் தெரிவித்திருப்பது எந்த ஒன்றையும் அமல்படுத்துவதற்குமுன் அரசாங்கம் தீர ஆராய்வதில்லை என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு என்று பாஸ் கோலா கிரை எம்பி டாக்டர் முகம்மட் ஹத்தா ரம்லி கூறினார்.

புக்கிட் பெண்டேரா எம்பி லியு சின் தோங், கடந்த ஏப்ரல் நாடாளுமன்றக் கூட்டத்தில் ஒரே நாளில் எட்டுச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.சட்டங்களை முறைப்படி ஆராயாமல் அவற்றை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அவசரம் காட்டுவதற்கு அது ஓர் எடுத்துக்காட்டு என்றார்.

“ஆதாரச் சட்டம் அதன் பலவீனங்களில் ஒன்று.அதனை அமல்படுத்துமுன்னர் அரசாங்கம் மாற்றரசுக் கட்சிகளுடனும் சம்பந்தப்பட்டவர்களுடனும் ஆலோசனை கலக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது”, என்று லியு குறிப்பிட்டார்.

அது பற்றி பக்காத்தான் செயலகம் நேற்று அதன் கூட்டத்தில் விவாதித்து அதில் சுயேச்சை இதழியல் மையம் அனுசரிக்கும் இணையத்தள இருட்டிப்பு தினத்துக்கு ஆதரவு தெரிவிப்பதெனவும் அந்த ஆதரவை இன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவிப்பது என்றும் முடிவு செய்தது.

இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் பிகேஆர் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார், பத்து எம்பி தியான் சுவா முதலான எம்பிகளும் கலந்துகொண்டனர்.

‘வெளிப்படையான விவாதங்களுக்கு இடமில்லை’

நஜிப் அவ்வாறு கூறியது கொள்கை விவகாரங்களில் பிஎன் அரசு அடிக்கடி பல்டி அடுப்பதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு என்று தியான் சுவா குறிப்பிட்டார்.தேர்தல் குற்றச் சட்டத் திருத்தத்திலும் இதேபோலத்தான் நடந்தது.

நேற்று வழக்குரைஞர் மன்றம், சுவாராம், சுயேச்சை இதழியல் மையம் முதலிய பல்வேறு அமைப்புகளின் வலை தளங்கள், இணையத்தள இருட்டடிப்பு தினத்தை அனுசரித்தன.இணையத் தளங்களில் வெறுப்பூட்டும் வகையில் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு இணையத்தள நடத்துனர்களையே பொறுப்பாக்கும் சட்டத் திருத்தங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவே அவை அந்த இயக்கத்தை மேற்கொண்டன.

இப்போது மறுஆய்வு மேற்கொள்ள நஜிப் இறங்கி வந்திருப்பது அவரது பலவீனத்தைக் காண்பிக்கிறது என்று நுருல் இஸ்ஸா கூறினார்.

“நாடு முழுக்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மறுஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“சட்டத் திருத்தங்களை எதிர்ப்பதில் பக்காத்தான் ரக்யாட் ஒன்றுபட்ட  நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை மீண்டும் வலியுறுத்திக் கொள்வதுடன் புதிய சட்டத்துக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது”, என்றாரவர்.

இன்னொரு நிலவரத்தில், செப்டம்பர் 15,16-இல் மலேசிய தினத்தைக் கொண்டாடுவதிலும் பக்காத்தான் சேர்ந்து கொள்ளும் என்று ஹத்தா அறிவித்தார்.

1963-இல், சாபாவும் சரவாக்கும் மலாயாவுடன் இணைந்து மலேசியா கூட்டரசு உருவானதை நினைவுறுத்த மலேசிய தினம் கொண்டாடப்படுகிறது.

கூட்டரசில் சிங்கப்பூரும்தான் சேர்ந்தது.ஆனால், மலேசியப் பிரதமர் தெங்கு அப்துல் ரஹ்மானுக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூவுக்குமிடையில் ஏற்பட்ட சச்சரவின் காரணமாக 1965 ஆகஸ்ட் 9-இல் சிங்கப்பூர் தனி நாடாகப் பிரிந்து சென்றது.

 

 

 

 

 

 

TAGS: