சபாஷ் ஊடக அறிக்கைகளை வெளியிட சிலாங்கூர் தடை விதிக்கிறது

சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor Sdn Bhd தனது நடவடிக்கைகள் குறித்து மாநில அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் ஊடக அறிக்கைகளை வெளியிடக் கூடாது என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.

மாநில அரசாங்க அதிகாரிகளுக்கும் சபாஷ் அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த வாரம் தொடக்கம் அன்றாடம் நிகழும் கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட பின்னரே எந்த அறிவிப்பும் விடுக்கப்பட முடியும் என்றார் காலித்.

“அவற்றுள் தண்ணீர் பங்கீடு அல்லது சேவைத் தடைகள் பற்றிய அறிவிப்புக்களும் அடங்கு,” என காலித் இன்று மாநில ஆட்சி மன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

தான் “சபாஷ் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு” இரண்டு தரப்பும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் வகை செய்கிறது என்றும் அதனை சிலாங்கூர் அரசாங்கம் அமலாக்குகிறது என்றும் அவர் சொன்னார்.

“அந்த ஒப்பந்தத்தின் கீழ் சபாஷ் மாநில நீர் விநியோகத்தை நடத்தும் நிறுவனமாகும். மாநில அரசாங்கம் அதனைக் கண்காணிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. நாங்கள் அந்த ஏற்பாட்டை அமலாக்குகிறோம்.” என்றார் சிலாங்கூர் மந்திரி புசார்.

சபாஷ் நிறுவனத்தைக் கண்காணிக்கும் குழு வ்ரைவில் அன்றாடம் கூடும். அது வெளிப்படைப் போக்கை உறுதி செய்ய அன்றாடம் ஊடக அறிக்கைகளை வெளியிடும்.

“நாங்கள் அவ்வப்போது தேசிய தண்ணீர் சேவை ஆணையத்தையும் கூட்டத்துக்குள் கொண்டு வருவோம்,” என்றும் காலித் தெரிவித்தார்.

.

TAGS: