ஆப்கானின் தலைநகர் காபூலில் இந்துக்கள் குடியிருக்க நிலம்

ஆப்கானின் தலைநகர் காபூலில் வாழூம் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் பயன்பாட்டுக்கான குடியிருப்புப் பகுதி மற்றும் சுடுகாட்டுக்கான நிலம் வழங்கப்பட்டுள்ளது. காபூலில் இந்த பிரத்யேக குடியிருப்புப் பகுதி அந் நகர மேயரால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்த குடியிருப்புப் பகுதி சிறுபான்மையின மக்களின் முக்கிய பிரச்னையாக இருந்து வந்த சுடுகாட்டுப் பிரச்னையை தீர்க்க உதவும் என்று காபூல் மேயர் கார் அந்தேஷ் நம்பிக்கை வெளியிட்டார்.

“காபூலில் இந்த சுடுகாடு இல்லாத பிரச்னை சில காலமாக இருந்து வந்தது. இதற்கு இன்று நாம் தீர்வுகண்டுள்ளோம். நமது இந்து மற்றும் சீக்கிய சகோதர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய இந்த சுடுகாட்டை நான் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார் அவர்.

ஆப்கானிஸ்தானில் ஆயிரத்துக்கும் அதிகமான இந்து மற்றும் சீக்கிய குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்கள் பல காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் கடந்த பல ஆண்டுகளாக சுடுகாடு இல்லாமல் இவர்கள் இருந்தனர். சீக்கியர்கள் தமது குருத்துவாராவின் சுற்றுப்புரத்திலேயே இறந்தவர்களை எரியூட்டினர். ஆப்கான் மேலவையின் நியமன உறுப்பினரான சீக்கியரான அனார்கலி ஹோனார்யார் என்பவரின் முயற்சியால் இந்த சுடுகாடு உருவாக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த சுடுகாட்டை அடுத்து இந்துக்களும் சீக்கியர்களும் குடிபுக வசதியாக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிக்கு அனார்கலி நகரம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆப்கானில் உள்ள இந்துக்களும் சீக்கியர்களும் பெரும்பாலும் வர்த்தகர்களாக இருப்பதாகக் கூறுகிறார் பிபிசி தாரி சேவையின் தயாரிப்பாளர் முகமது பஷிர். ஆப்கான் இந்துக்கள் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் கிடையாது என்றும் காபூல் இஸ்லாமிய ஆதிக்கத்தில் கீழ் வருவதற்கு முன்பே அங்கு இந்துக்கள் இருந்ததாகவும் அவர்கள் இந்து மதத்தை பின்பற்றும் பூர்விக ஆப்கானியர்கள் என்றும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.