மேலும் 12 ஐஎஸ்ஏ கைதிகள் விடுதலை

கமுந்திங் தடுப்பு முகாமிலிருந்து உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (ஐஎஸ்ஏ) கைதிகள் 12பேர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் இதை உறுதிப்படுத்தினார்..

இவர்கள் இம்மாதம் விடுவிக்கப்பட்ட இரண்டாவது தொகுதியினராவர். முதல் தொகுதியினர் ஆகஸ்ட் 3-இல் விடுவிக்கப்பட்டனர்.அதில் மூவர் இருந்தனர்.

அந்த முகாமில் இன்னும் 30 கைதிகள் எஞ்சியுள்ளனர்.

இன்று விடுவிக்கப்பட்டவர்களில் பட்சுல்லா அப்துல் ரசாக்கும் ஒருவர்.விசாரணையின்றித் தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய கைதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாகினியுடன் பேசிய அவரின் தாயார் ஹதிஜா சி.பி.வீராவு, தம் மகன் இன்று நோன்பு திறக்க சுங்கை பூலோ வந்துசேர்வார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

“இன்று மாலை ஆறு மணிக்கெல்லாம் வந்து சேர்ந்து விடுவார் என்று தெரிவித்தார்கள்”, என்றாரவர்.

தடுப்புக்கைதிகள் விடுவிக்கப்பட்டது பற்றிக் கருத்துரைத்த மனித உரிமை ஆணைய(சுஹாகாம்) உறுப்பினர் ஜேம்ஸ் நாயகம், ஐஎஸ்ஏ சட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டிருப்பதால் எல்லாக் கைதிகளுமே விடுதலை செய்யப்பட்டிருக்க  வேண்டும் என்றார்.

“ஐஎஸ்ஏ அகற்றப்பட்டிருப்பதால் எல்லாருமே உடனடியாக விடுவிக்கப்படுவர் என்றே எதிர்பார்த்தோம்”, என்றாரவர்.