லண்டன் : கடலில் தத்தளித்த மாணவியை பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் காப்பாற்றியுள்ளார்.பிரிட்டனில் ஆங்கில்சே தீவில், விடுமுறையை கழிக்க வந்த ஒரு குடும்பத்தினர் கடலில் குளித்து கொண்டிருந்தனர். இதில், 13 வயது பெண் திடீரென அலையில் அடித்து செல்லப்பட்டாள். இவளது, 16 வயது சகோதரி தன்னுடைய தங்கையை காப்பாற்ற கடலுக்குள் நீந்தி சென்றாள். சிறிது நேரத்தில் மூத்த மகளையும் காணாத அவளது தாய் கதறினார்.
உடனடியாக கடற்கரையில் இருந்த நீச்சல் வீரர்கள் அருகில் இருந்த விமானப்படை தளத்துக்கு தகவல் கொடுத்தனர். இச்சம்பவத்தை கேள்விப்பட்ட, ஹெலிகாப்டர் ஓட்டும் பயிற்சி பெற்ற இளவரசர் வில்லியம், ராயல் ஏர்போர்சுக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் சில வீரர்களை துணைக்கு அழைத்து கொண்டு, காணாமல் போன பெண்களை கடலில் தேட துவங்கினார்.
ஹெலிகாப்டரில் இருந்த வீரர்கள் கடலில் தத்தளித்த பெண்ணை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். முன்னதாக நீச்சல் வீரர்கள் சிலர் 13 வயது பெண்ணை மீட்டு கரைக்கு கொண்டு வந்து விட்டனர். தங்கையை தேட போய் ஆபத்தில் சிக்கிய பெண் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.