கூடுதலான அகதிகளை ஏற்றுக் கொள்ள ஆஸ்திரேலியா முடிவு

ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 40 வீதம் அகதிகளைஏற்றுக் கொள்ளும் என்று அந்நாட்டு பிரதமர் ஜூலியா கிலார்ட் அறிவித்துள்ளார்.

உள்வாங்கும் அகதிகளின் எண்ணிக்கையை 13,500-இலிருந்து 20,000 ஆக அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு மற்றும் தஞ்சம் கோருபவர்களை தொலைதூர பசிபிக் தீவுகளில் உள்ள தடுப்பு முகாம்களில் தங்க வைக்கும் நடவடிக்கை மூலம் ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து பெற விரும்புகிறவரகள் முன்கூட்டியே அதற்கான விண்ணப்பத்தை அனுப்புவதை உறுதிப்படுத்த முடியும் எனவும் ஜூலியா கிலார்ட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை நோக்கி வரும் தஞ்சம் கோருவோரை ஏற்றிய படகுகளின் எண்ணிக்கை அண்மைக்காலங்களாகவே அதிகரித்துவருகின்றது.

ஆனால் மக்கள் கடல் மூலமான மிக ஆபத்தான கடற்பயணங்களை கைவிட்டு சட்டரீதியான வழிகளில் தஞ்சம் கோருவதை ஊக்குவிப்பது தான் தமது நாட்டில் அனுமதிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதற்கு காரணம் என்று பிரதமர் ஜூலியா கிலார்ட் மேலும் கூறுகிறார்.

சட்டவிரோத குடியேறிகளின் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் அரசியல் ரீதியாக திண்டாடிக்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அரசு, தஞ்சம் கோருவோரின் பிரச்சனையை ஆராய்வதற்காக அமைத்த சுயாதீன ஆணைக்குழுவின் 22 பரிந்துரைகளில் ஒன்றுதான் இந்த எண்ணிக்கை அதிகரிப்பு.

அதுபோல ஆணைக்குழுவின் இன்னொரு பரிந்துரையின்படியே, நவ்றூ மற்றும் பப்புவா நியூ கினி ஆகிய இடங்களில் உள்ள தஞ்சம் கோருவோருக்கான விசாரணை முகாம்களும் மீண்டும் திறக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.