ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் சிரியா மீது போர்: ஒபாமா

வாஷிங்டன்: ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் சிரியா மீது போர் தொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்திற்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர். அந்த நாட்டு ராணுவத்தால் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள். 17 மாதங்களாக நடைபெறும் இந்த கலவரத்தில் இதுவரை 18 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் சிரியாவை விட்டு வெளியேறி பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். 2 லட்சம் பேர் உணவு பொருட்கள் ஏதுமின்றி உதவிக்காக காத்திருக்கிறார்கள்.

இந்த தகவலை ஐ.நா. சபை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அங்கு ஜனநாயகத்தை மலரச் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அதிபர் ஆசாத் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை அவர் ஏற்க மறுத்து விட்டார். இந்த நிலையில் டமாஸ்கஸ், அலேப்போ, டெரா ஆகிய நகரங்களில் போராட்டக்காரர்கள் மீதும், கிளர்ச்சியாளர்கள் மீதும் ராணுவம் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறுகையில்,

“சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளது. இதை அந்த நாடே ஒப்புக் கொண்டுள்ளது. தங்களை எதிர்த்து போராடும் மக்கள் மீது அந்த ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம். அதே நேரம் வெளிநாடுகள் தலையிட்டால் அவற்றை பயன்படுத்துவோம் என்று கூறியுள்ளது. இதன் மூலம் சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் இருப்பது உறுதியாகி விட்டது. தற்போது அங்கு நடைபெறும் செயல்களை பார்க்கும் போது ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவது போல் தெரிகிறது. அது உறுதி செய்யப்பட்டால் அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. நாங்கள் எங்களது எல்லையை தாண்டி உள்ளே வர வேண்டியது வரும். சிரியா மீது அமெரிக்கா போர் தொடுக்கும். இது குறித்து இஸ்ரேல் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம்” என்றார்.