வாஷிங்டன்: முதன் முதலில் நிலவில் கால்பதித்தவர் என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் காலமானார்.
கடந்த 5-ம்தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய அவர் சில தினங்களுக்கு முன்னர் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். உடல் நல குறைவு காரணமாக தன்னுடைய 82-வது வயதில் மரணமடைந்தார்.
1969 ஆம் ஆண்டு அப்போலோ 11 என்ற சரித்திர சிறப்பு மிக்க விண்வெளிப் பயணத்தில் ஆம்ஸ்டிராங்குடன் நிலவில் கால்பதித்திருந்த பஸ் அல்ட்ரின், ஆம்ஸ்டிராங் ஒரு மிகச் சிறப்பான விண்வெளி விமானி என்றும் அணியின் கட்டளைத் தலைவர் என்றும் கூறினார்.
நீல் ஆம்ஸ்டிராங் வெளிப்படுத்திய சேவை, சாதனை, எளிமை ஆகியவற்றை அமெரிக்கர்கள் மதித்துப் பின்பற்ற வேண்டும் என அவரது குடும்பம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“அடுத்த தடவை வானம் தெளிவாக இருக்கும் ஒரு இரவுப் பொழுதில் நீங்கள் வெளியே போகையில் நிலவைப் பார்க்கும்போது, நீல் ஆம்ஸ்டிராங்கை ஒரு முறை மனதில் நினைத்து கண் சிமிட்டுங்கள்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலவில் கால்பதித்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங் “அவர் வாழ்ந்த காலத்தில் பார்க்கையில் மட்டுமல்லாமல் எக்காலத்துக்குமே மாபெரும் அமெரிக்க நாயகன் தான்” என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.