டமாஸ்கஸ்: சிரியாவில், அந்நாட்டு கிளர்ச்சியாளர்களுடன் நடக்கும் தொடர் சண்டையால், தலைநகர் டமாஸ்கஸ் அருகே நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக்கோரி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் முதல் போராடி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க அரசு படைகள் நடத்தும் தாக்குதலில், 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். அதிபர் ஆசாத்தை பதவி விலகும்படி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.
ஆனால், சீனா, ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகள், சிரிய அதிபரை ஆதரிக்கின்றன. இதன் காரணமாக, அந்நாட்டின் மீது, முழு வீச்சில் பொருளாதார தடையை அமல்படுத்த முடியவில்லை. எனவே, கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவி செய்து வருகிறது. இதை தொடர்ந்து அந்நாட்டில் சண்டை தீவிரமடைந்துள்ளது.
பல நகரங்களை, கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதை மீண்டும் கைப்பற்ற, அரசு படைகள் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள தராயா என்ற நகரில் ஒரே இடத்தில் 320-க்கும் அதிகமான சடலங்கள் புதைக் கப்பட்டுள்ள காட்சியை கிளர்ச்சியாளர்கள் இணைய தளங்களில் வெளியிட்டுள்ளனர். இன்னும் பல இடங்களில் குவியல் குவியலாக காயமடைந்த சடலங்கள் கிடத்தப்பட்ட காட்சிகள் அடங்கிய படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராணுவத் தாக்குதலில் தான் இவ்வளவு பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் சிரிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.