பிகேஆரும் தேர்தல் வேட்பாளர்களும்

பிகேஆர் ஒரு புதிய கட்சி என்பதால் கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில்-2004 இலும் 2008 இலும்-வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களைத் தேடிப் பிடிப்பது அதற்குப் பெரும்பாடாக இருந்தது.

அது, அப்போது. இப்போது அப்படி இல்லை என்கிறார் பினாங்கு பிகேஆர் தலைவர் மன்சூர் ஒஸ்மான். தகுதியான வேட்பாளர்கள் குவிந்து கிடக்கிறார்கள். யாரைத் தேர்வு செய்வது என்பதுதான் இப்போது பிரச்னை.

“முன்பு தேர்தல் காலங்களில் நல்ல வேட்பாளர்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. இப்போது பலரும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார்கள்.

“அதனால், தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் கிடைப்பதில் பிரச்னையே இல்லை.”

முன்பு, கட்சிக்கு எதிராக, குறிப்பாக மைய நீரோட்ட ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருந்த எதிர்மறையான பரப்புரையால் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தார்கள்.

இப்போது, மிகப் பலர் பிகேஆர் சின்னத்தின்கீழ் போட்டியிட முன்வந்திருக்கிறார்கள்.

எதிர்வரும் தேர்தலில்- 2013-க்குள் அது நடைபெற வேண்டும்- பக்காத்தான் ரக்யாட்டில் முன்பு இருந்ததுபோல்தான் இடஒதுக்கீடுகள் இருக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

2008 பொதுத் தேர்தலில் சட்டமன்றத்துக்கு டிஏபி 19 இடங்களிலும், பிகேஆர் 16 இடங்களிலும் பாஸ் 5 இடங்களிலும் போட்டியிட்டன. நாடாளுமன்றத்துக்கு டிஏபிக்கு ஏழு இடங்கள், பிகேஆருக்கு 4, பாஸுக்கு 2.

சட்டமன்றத்துக்குப் போட்டியிட்ட 40 இடங்களில் 29-ஐயும் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்ட 13 இடங்களில் 11-ஐயும் பக்காத்தான் வென்றது.

அம்னோ 11 சட்டமன்ற தொகுதிகளில் வென்றது. அதன் பங்காளிக் கட்சிகளான கெராக்கானுக்கும் மசீச-வுக்கு ஓர் இடமும் கிடைக்கவில்லை.

இரண்டாண்டுகளுக்குப் பின்னர் இப்போது பினாங்கில், பிகேஆரின் 2 எம்பிகள் கட்சியிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறார்கள். தலைமைத்துவத்துடன் ஒத்துப்போக முடியவில்லை என்று காரணம் கூறியிருக்கிறார்கள்.

தலைமைத்துவத்துடன் ஒத்துப்போக முடியாமை, கட்சித் தாவல்கள் முதலிய பிரச்னைகளை எதிர்நோக்கும் பிகேஆரால்  அவர்கள் சம்பந்தப்பட்ட அந்த இரண்டு தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்ற முடியுமா? அது, எளிதாக இருக்காது என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், கட்சிதாவல் எல்லாம் ஒரு பிரச்னையே அல்ல என்கிறார் பெனாந்தி சட்டமன்ற உறுப்பினரான மன்சூர்.

“கட்சியை விட்டு விலகிய எம்பிகள் பற்றி மக்கள் அறிவார்கள். அதனால் அந்த இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு”, என்றாரவர்.

ஸஹ்ரேய்ன் முகம்மட் ஹஷிம்(பாயான் பாரு), டான் டீ பெங்(நிபோங் தெபால்) ஆகிய இருவரும் கட்சிவிலகி சுயேச்சை எம்பிகள் ஆனார்கள்.

டான், ஜைட் இப்ராகிமின் பார்டி கித்தாவில் அண்மையில் சேர்ந்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஆகியுள்ளார்.ஸஹ்ரேய்ன், அடிக்கடி பிஎன் நிகழ்வுகளில் காணப்படுகிறார். 

எதிர்வரும் தேர்தலில் பினாங்கில் எத்தனை இடங்களில் பிகேஆர் போட்டியிடும் என்பது பற்றி மன்சூர் எதுவும் கூற மறுத்தார்.

மாநில அளவில் தொகுதி ஒதுக்கீடு குறித்து நடைபெறும் பேச்சுகள் பற்றியும் தகவல் தெரிவிக்க அவர் தயாராக இல்லை. அது பற்றிப் பேச தலைமைத்துவம் தடை போட்டிருப்பதாக அவர் சொன்னர்.

“பேச்சுகள் இறுதிநிலையை அடைந்து விட்டன என்று மட்டுமே இப்போதைக்குக் கூற முடியும்.

“ஒவ்வொரு கட்சியும் அதன் தேவைகளை, கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது. பேச்சுகளில் எழும் சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு”, என்று மன்சூர் குறிப்பிட்டார்..

TAGS: