சர்ச்சையை உருவாக்கியுள்ள ஆதாரச் சட்டத்தின் பிரிவு 114ஏ அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு ஏற்ப மறு ஆய்வு செய்தின் மூலம் ரத்துச் செய்ய முடியும் என வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ கூறுகிறார்.
கூட்டரசு அரசமைப்பின் 5(1), 8(1) பிரிவுகள், “சட்டத்துக்கு முரணாக எந்த ஒரு நபருடைய உயிர் அல்லது தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது” என்றும் சட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் சமமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுவதாக மின் அஞ்சல் மூலம் அளித்த பதிலில் அவர் சொன்னார்.
மேலும் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 11வது பிரிவு பின் வருமாறு கூறுகிறது: “குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரையில் ஒவ்வொரு தனிநபரும் நிரபராதியே”.
“குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பு அரசுத் தரப்பைச் சார்ந்தது மற்றும் நிரூபிக்கப்படும் வரையில் குற்றம் புரியப்படவில்லை எனும் பொதுச்சட்டக் கோட்பாடு ஆகிய இரு தூண்களை அடிப்படையாகக் கொண்டது நமது கிரிமினல் நீதிபரிபாலன முறை என்று நமது கூட்டரசு நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது. அவை இரண்டும் ஒரங்கே நியாயமான விசாரணை நடைபெறுவதற்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்துகின்றன”, என லிம் சொன்னார்.
114ஏ பிரிவு நிரபராதி என்ற ஊகத்திற்கு முரணாக அமைந்துள்ளது என்றும் இணையம் சம்பந்தப்பட்ட குற்றங்களில் குற்றத்தை நிரூபிப்பது கடினம் என்றும் அவர் விளக்கினார்.
ஏனெனில் கட்டுப்பாடற்ற இணையப் பதிவு முறை, பொருத்தமற்ற நடவடிக்கைகளுக்கு இணையத் தள உரிமையாளர் பொறுப்பேற்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தத் திருத்தத்தை சட்டப் புத்தகங்களிலிருந்து அகற்றுமாறு அதிகாரிகளையும் அரசாங்கத்தின் தலைமை சட்ட ஆலோசகரையும் வற்புறுத்துமாறு நாடாளுமன்றத்தையும் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லையும் கேட்டுக் கொள்வது பிரச்னையை தீர்ப்பதற்கான இன்னொரு வழி என லிம் குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் வழக்குரைஞர் மன்றம் அப்துல் கனியை சந்தித்ததாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
ஆதாரச் சட்டத்துக்கு ஒரு திருத்தமாக 114ஏ பிரிவு கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
எந்த ஓர் இணைய வெளியீட்டுடன் காணப்படும் எந்த ஒரு நபர் அல்லது அமைப்பு அதன் உள்ளடக்கத்துக்கான ஆசிரியர் என அந்தத் திருத்தம் ஊகிக்கிறது.
அந்த நபர் அல்லது அமைப்பு அதன் ஆசிரியராக இல்லாவிட்டால் தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவர்களைச் சார்ந்ததாகும். மற்ற ‘சட்டவிரோத’ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் இணைய தொடர்பு வசதிகளை வழங்கும் மற்ற கட்டமைப்பு உரிமையாளர்களுக்கும் அது பொருந்தும்.