கோ: பினாங்கு முதலமைச்சர் குறித்து ஊகங்கள் வேண்டாம்

பினாங்கு முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் குறித்து ஊகிப்பதில் அளவுமீறி பரபரப்பு காண்பிக்க வேண்டாம் என்று பிரதமர்துறை அமைச்சர் கோ சூ கூன் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்கள், பிரதமர்  பொதுத்தேர்தல் தேதியை அறிவிக்கும்வரை காத்திருக்க வேண்டும்.

கெராக்கான் தலைவருமான கோ, கட்சிக்கென தனி வியூகம் இருப்பதாகவும் அது திட்டங்களிலும் மக்களுக்குச் சேவை செய்வதிலும்தான் கவனம் செலுத்துமே தவிர வேட்பாளர்களை அறிவிப்பதில் அவசரம் காண்பிக்காது என்றார்.

“தேர்தல் காய்ச்சலை அதிகம் சூடுபடுத்திவிடக்கூடாது. பிறகு தேர்தல் வரும்போது வேகம் இருக்காது.

“என்ன முடிவெடுப்பது என்பது எங்களுக்குத் (கெராக்கான்) தெரியும்.இன்னும் அவகாசம் இருக்கிறது.இப்போதைக்கு மக்களுக்குச் சேவை செய்வதில் கவனம் செலுத்துவதே முக்கியம்.” பினாங்கு அம்னோ இளைஞர் தலைவர் ஷேக் ஹுசேன் மைடின், முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளரின் பெயரைத் தெரிவிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கு எதிர்வினையாக கோ இவ்வாறு கூறினார்.

நேற்றிரவு கோ, தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புத் துறையின் பினாங்கு அலுலவகமும் தெம் மேற்கு போலீஸ் மாவட்டமும் பாயான் பாரு போலீஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த மாநில அளவு 1மலேசியா ஹரி ராயா விருந்துபசரிப்பில் செய்தியாளர்களிடம் பேசினார்.

மிகவும் நெருக்கிக் கேட்டபோது, “பொதுத் தேர்தல் அருகில் வரும்போது வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்”, என்றார்.

இன்னொரு நிலவரத்தில், ருக்குன்தெதாங்கா பகுதிகளில் தன்னார்வ காவல்சுற்றுத் திட்டம்(விபிஎஸ்) தொடங்குவதே  குற்றச்செயல்களைக் குறைக்க சரியான வழி என்றார்.

எல்லா ருக்குன்தெத்தாங்கா பகுதிகளிலும் மக்கள் காவல்சுற்றுகளிம் ஈடுபட  தன்னார்வம் கொண்ட குழுக்களை அமைத்து குற்றச் செயல்களைத் தடுப்பதில் போலீசுக்கு உதவ வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.

-பெர்னாமா

TAGS: