பக்காத்தான்: முன்னாள் பிஎன் எம்பிகளை ஏற்றுக்கொண்டதில் நியாயம் உண்டு

பக்காத்தான் ரக்யாட், தான் ஆட்சி  செய்யும் பினாங்கு மாநிலத்தில் கட்சித்தாவல்-தடுப்புச் சட்டம் கொண்டு வர திட்டமிடும் வேளையில் சாபாவில் பிஎன் எம்பிகள் கட்சிமாறியதை ஏற்றுக்கொண்டது அதன் போலித்தனத்தைக் காண்பிப்பதாகக் குறைகூறப்பட்டதை எதிர்த்து தான் செய்ததே நியாயமே என்று வாதிடுகிறது.

அந்த எம்பிகள் பக்காத்தானுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது மக்களின் உரிமைக்கட்டளையை எள்ளி நகையாடும் ஒரு செயல் அல்ல என்று பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா குறிப்பிட்டார்.

“அடுத்த தேர்தலில் பிஎன் கட்சி சார்பில் போட்டியிடப்போவதில்லை என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.அந்த வகையில் உரிமைக்கட்டளை மீண்டும் மக்களிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது”, என்று தியான் சுவா செய்தியாளர்களிடம் கூறினார்.

ஐக்கிய பாசோக்மொமொகுன் கடாசான்டுசுன் மூருட் நிறுவனத்தின் (உப்கோ) துவாரான் எம்பி ஃபில்ஃபரட் பும்புரிங்கும் அம்னோவின் பியுஃபோர்ட் எம்பி லாஜிம் உக்கினும் தத்தம் கட்சியைவிட்டு விலகி பக்காத்தானை ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

கட்சித்தாவல் என்னும்போது கட்சிமாறுவதை பக்காத்தான் அடியோடு எதிர்க்கவில்லை என்றும் பணத்தையும் பதவியையும் காண்பித்து கட்சித்தாவத் தூண்டுவதைத்தான் அது எதிர்க்கிறது என்றும் தியான் சுவா குறிப்பிட்டார்.

“அதுவும் இதுவும் ஒன்றல்ல.இவர்களுக்கு பிஎன்மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது, பக்காத்தானுடன் இணைந்து செயல்பட விரும்புகிறார்கள்”, என்றாரவர்.

கட்சித்தாவல்-தடுப்புச் சட்டத்தை “அப்படியே பின்பற்றுவதிலும் அபாயமிருக்கிறது” என்று கூறிய அவர் அதனுடன் தொடர்புகொண்ட பல்வேறு அம்சங்களையும் பக்காத்தான் விவாதித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

“பிரிட்டனில் ஈராக் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து(அப்போதைய பிரதமர்) டோனி பிளேய்ரின்  தொழிலாளர் கட்சி எம்பிகள் அக்கட்சியிலிருந்து விலகினர்.

“கட்சித்தாவல் சட்டத்தை அப்படியே பின்பற்றுவதாக இருந்தால் அவர்கள் பதவி விலகி இருக்க வேண்டும்.ஆனால்,அவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்துகொண்டு பிளேய்ருக்கு எதிராக போராட வேண்டும் என்பதையே மக்கள் விரும்பினார்கள்.

“சட்டம் ஒரு எம்பி மனச்சாட்சிப்படி செயல்படுவதைத் தடுக்கக் கூடாது. கட்சித்தாவலைத் தடுக்கும் சட்டம் மக்களின் உரிமைக்கட்டளையைப் பாதுகாக்கவும் வேண்டும்”, என்று தியான் சுவா கூறுனார்.

TAGS: