உங்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது? உத்துசானிடம் சுவாராம் கேள்வி

சுவாராமுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்று கேட்கும் உத்துசான் மலேசியா அதன் நிதி மூலங்களைத் தெரிவிக்கத் தயாரா என்று திருப்பிக் கேட்டிருக்கிறார் அந்த மனித உரிமை என்ஜிஓ-வின் ஆலோசகர் குவா கியா சூங்.

“உத்துசானுக்குப் பணம் கொடுப்பது யாரென்று சொல்லுங்களேன்.தெரியவில்லையென்றால் அங்குதானே வேலை செய்கிறீர்கள்.கேட்டுப் பாருங்கள்”.இன்று சுவாராம், மனித உரிமை மீதான அதன் ஆண்டறிக்கையை வெளியிட்ட நிகழ்வில் குவா செய்தியாளர்களிடம்  பேசினார்.

உத்துசான் செய்தியாளர் ஒருவர் அப்படி ஒரு கேள்வியை முன்வைத்து அதற்கு குவாதான் பதில் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதால் குவா(வலம்) இவ்வாறு கூறினார்.

“எதற்காக எங்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டும்?அம்னோ சொல்லுமா அதற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை?

“உங்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை நீங்கள் சொல்வீர்களா?”, என்றவர் காட்டமாகக் கேட்டார்.

“பிறகு ஏன் சுவாராமை மட்டும் கேட்கிறீர்கள்? சுவாராமுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை நாட்டுக்கே தெரிவிக்க வேண்டுமா, என்ன?”

பணம் அளிப்பவர்கள்

அதற்கு பின்லாந்து, அமெரிக்கா, கனடா, மலேசியாவின் மாநில அரசுகள், மக்கள் அளிக்கும் நன்கொடைகள் மூலமாகப் பணம் வருவதாக குவா குறிப்பிட்டார்.

“நான் நூல் எழுதியபோது அதன் விற்பனையில் கிடைத்த பணத்தில் ரிம2,000-த்திலிருந்து ரிம3,000வரை சுவாராமுக்கு கொடுத்தேன்.

“நாட்டில் உள்ள தனிப்பட்ட பலரும்கூட சுவாராமுக்குப் பணம் கொடுத்து உதவுகிறார்கள்”, என்று குவா கோலாலம்பூர்-சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சுவாராம் அதன் நிதிமூலம் பற்றியும் அது ஏன் ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது என்பதையும் முன்பே பலமுறை விளக்கியுள்ளது. ஆனால், அந்த விளக்கங்களைச் செய்தித்தாள்கள் வெளியிடவில்லை என்றாரவர்.

கடந்த மாதம்கூட சுவாராமை ஒரு என்ஜிஓ-வாக  பதிவுசெய்வது சிரமமாக உள்ளது என்றும் அதன் செலவுக்குப் பணம் நன்கொடையாகவும் மான்யமாகவும் கிடைப்பதாகவும் தாம் சொன்னதாக குவா கூறினார்.

சுவாராம் ஊழல் செய்வதாக யாராவது நினைத்தால் தாராளமாக அதிகாரிகளிடம் புகார் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.