தகவல்களை அம்பலப்படுத்துவோர் மய்யத்தை மெர்தேக்காவுக்கு முதல் நாள் ராபிஸி தொடக்கி வைப்பார்

அரசாங்கத்துக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்திய என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் சம்பந்தப்பட்ட தகவல்களை அம்பலப்படுத்தியதற்காக நீதிமன்ற நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ள ராபிஸி ராம்லி நாளை தகவல்களை அம்பலப்படுத்துவோர் மய்யத்தை தொடக்கி வைக்கிறார்.

அதற்கு தேசிய மேற்பார்வை, தகவல்களை அம்பலப்படுத்துவோர் மய்யம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அந்தத் தொடக்க விழாவில் அந்த மய்யத்தின் நிர்வாக இயக்குநரான ராபிஸியும் வழக்குரைஞர் மன்ற பொருளாளர் ஸ்டீவன் திரு-வும் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாஸ்லி மாலிக்கும் உரையாற்றுவார்கள்.

“நான் எதிர்காலத் திட்டத்தை அதில் விளக்குவேன். தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அடித்தளம் அங்கு அமைக்கப்படும் என நான் நம்புகிறேன்,” என தொடர்பு கொள்ளப்பட்ட போது ராபிஸி சொன்னார்.

தகவல்களை அம்பலப்படுத்துவது மய்யத்தின் பணிகளில் சிறிய பகுதியாகும் என வலியுறுத்திய ராபிஸி, தகவல்களை அம்பலப்படுத்துவது தொடர்பான சட்ட சீர்திருத்தம், மேற்பார்வை மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார்.

திரு சட்ட அம்சங்கள் பற்றிப் பேசும் வேளையில் மாஸ்லி,  தகவல்களை அம்பலப்படுத்துவது தொடர்பான இஸ்லாமியக் கண்ணோட்டத்தை விளக்குவார்.

மய்யம் சுயேச்சையாக இயங்க முயலும்

அந்த மய்யம் அரசியல் தொடர்புடையது என பொது மக்கள் எண்ணக்கூடும் என்பதை ஒப்புக் கொண்ட ராபிஸி,  மய்யம் சுயேச்சையாக இயங்க முயலும் எனத் தெரிவித்தார். அவர் பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநரும் ஆவார்.

“கூடிய வரை நாங்கள் சுயேச்சையாக இயங்க முயலுவோம். ஏனெனில் தகவல்களை அம்பலப்படுத்துவது மய்யத்தின் பணிகளில் சிறிய பகுதியாகும். நாங்கள் சிவில் சமூகப் பணிகளில் அதிகம் ஈடுபடுவோம். அதன் கீழ் சட்ட வடிவமைப்புக்களை வழங்கவும் தகவல்களை அம்பலப்படுத்துவது தொடர்பில் சமூகத்தை பண்படுத்தவும் நாங்கள் பாடுபடுவோம்.”

சிவில் சமூகமும் மற்ற சுயேச்சை அமைப்புக்களும் மய்யத்துக்கு ஆதரவளிக்கும் என ராபிஸி நம்புகிறார்.
 
என்எப்சி நிதிக் கணக்குகளை ஊடகங்களுக்கு வெளியிட்டதற்காக Bafia என்ற வங்கி, நிதி நிறுவனச் சட்டத்தின் 97வது பிரிவின் கீழ் ஆகஸ்ட் 1ம் தேதி ராபிஸி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் தகவல்களை அம்பலப்படுத்துவோர் பாதுகாப்புச் சட்டம் இருந்த போதிலும் ஊடங்களுக்கு அவர்கள் அந்தத் தகவல்களை வழங்கும் போது செல்லாக் காசாகி விடுகிறது.

இந்த நாட்டின் நிதி நிறுவனங்களுடைய நேர்மையை பாதுகாப்பதற்கு ராபிஸி மீது குற்றம் சாட்டப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.

 

TAGS: