மெர்டேகா கொண்டாட்டத்தில் நஜிப்புக்குப் பக்கத்தில் கிட் சியாங்குக்கு இடமளிக்கத் தயார்

தகவல்,தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம், புக்கிட் ஜலில் அரங்கில் நடைபெறும் மெர்டேகா தினக் கொண்டாட்டத்தில் மாற்றரசுக் கட்சித் தலைவர்களுக்கு இடமில்லை என்று கூறப்படுவதை மறுக்கிறார். வெள்ளிக்கிழமை இரவுக் கொண்டாட்டத்தில் அவர்களும் தாராளமாக கலந்துகொள்ளலாம் என்கிறார் அவர்.

“அது உண்மையல்ல. எவரும் வரலாம். அது பிஎன் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் நிகழ்வல்ல. எல்லாரும் வரலாம்.

“கிட் சியாங் (டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம்) வந்தால் அவர் முன்வரிசையில் பிரதமருடன் அமரலாம்.”

“(பாஸ் தலைவர்) அப்துல் ஹாடி ஆவாங் அல்லது (பிகேஆர் நடப்பில் தலைவர்) அன்வார் இப்ராகிம் வந்தால் அவர்களுக்கும் சிறப்பு இருக்கைகள் ஏற்பாடு செய்வோம்”, என்று ரயிஸ் யாத்திம் உத்துசான் மலேசியாவுக்கு அளித்த நேர்காணலில் கூறினார். அம்மூவரும் வந்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

அவர்களுக்கு டாட்டாரான் மெர்டேகாவில் வெள்ளிக்கிழமை காலை நடைபெறும் மெர்டேகா அணிவகுப்பு நிகழ்வுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாக ரயிஸ் தெரிவித்தார்.

திங்கள்கிழமை, அமைச்சின் தலைமைச் செயலாளர் கமருடின் சியாராப், புக்கிட் ஜலில் அரங்கில் உள்ள இருக்கைகள் முக்கிய பெருமக்களுக்கும் பிஎன் உறுப்புக்கட்சிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய குழுக்களுக்கும் ஒதுக்கப்படும் என்றும் பொதுமக்கள் அரங்குக்கு வெளியில் வைக்கப்படும் நான்கு திரைகளில் நிகழ்வுகளைக் கண்டுக் களிக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

மாற்றுத்தரப்புத் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கூறிய அவர், அவர்கள் அரங்குக்கு வெளியே பொதுமக்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்றார்.

அவர்களுக்கு அரசாங்கத்தின் மெர்டேகா தினக்  கொண்டாட்டத்தில் “அக்கறை இல்லை” என்பதாலும் கொண்டாட்டச் சின்னத்தைக்கூட புறக்கணித்தார்கள் என்பதாலும் அழைப்பு அனுப்பப்படவில்லை என்றவர் விளக்கினார்.

ஆனால், மறுநாளே ரயிஸ் அப்படியெல்லாம் இல்லை என்றும் எல்லாருமே அரங்குக்குள் சென்று கொண்டாட்டத்தைக் கண்டுகளிக்கலாம் என்றார்.