கட்சித்தாவல்-தடுப்புச் சட்டத்துக்கு கெராக்கான் எதிர்ப்பு

பினாங்கு சட்டமன்றத்தின் நவம்பர் மாதக் கூட்டத்தில் கட்சிவிட்டு கட்சி தாவும் அரசியல் தவளைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள கட்சித்தாவல்-தடுப்புச் சட்டத்தை எல்லாருமே வரவேற்கவில்லை.

அச்சட்டம் கொண்டுவர பக்காத்தான் ரக்யாட் காட்டும் அவசரம் ‘ ஒரு நாடகமாக அல்லது கூத்தாகத்தான்’   பினாங்கின் மாற்றரசுக் கட்சிகளுக்கு- குறிப்பாக கெராக்கானுக்குப் படுகிறது.ஏனென்றால், பினாங்கில் அப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டாலும் அதைக் கூட்டரசு அரசாங்கம் நிராகரிக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாக அது கருதுகிறது.

பக்காத்தான் மக்களின் அதிகாரத்தை, அவர்களின் விருப்பத்தேர்வை மதிப்பதாக இருந்தால் நாடாளுமன்றத்தில் அச்சட்டத்தைக் கொண்டுவர முன்மொழிய வேண்டும் என்று மாநில கெராக்கான் சட்ட, மனித உரிமை விவகாரப் பிரிவுத் தலைவர் பல்ஜிட் சிங் கூறினார்.

“அந்த மேன்மையான மன்றத்தில் அதற்கான சட்டத்திருத்தங்களைக் கொண்டுவரும் அரசியல் உறுதி  இரு தரப்பினருக்கும் வேண்டும்.அப்போதுதான் அச்சட்டம் ஒரு மாநிலத்துக்கு மட்டுமல்லாமல் நாடு முழுமைக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கும்”.

அன்வார் ஒரு “கபடதாரி”

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் 2009 செப்டம்பர் 16-இல், புத்ரா ஜெயாவைக் கைப்பற்றுவதற்காக பிஎன் எம்பிகள் பலரைக் கட்சிமாற வைக்க மேற்கொண்ட முயற்சியையும்  அது தோல்வியில் முடிந்ததையும் அவர் நினைவுபடுத்தினார்.

அதே அன்வார் இப்போது பினாங்கின்  கட்சித்தாவல்-தடுப்புச் சட்டத்துக்கு  வரவேற்பு கூறியுள்ளார் என்றாலும் அதை பல்ஜிட் ஏற்கவில்லை.

“அன்வார் ஒரு கபடதாரி.அவர் உண்மையில் அதில் அக்கறை கொண்டவராக இருந்தால் சிலாங்கூரில் அதைக் கொண்டு வந்திருக்க வேண்டும்”, என்று அந்த பினாங்கு வழக்குரைஞர் கூறினார்.பல்ஜிட், எதிர்வரும் பொதுத் தேர்தலில் கெராக்கான் வேட்பாளராகக் களம் இறக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

சட்டமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள அச்சட்டம் தொடர்பில் நேற்று கொம்டாரில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ கலந்துரையாடலில் அம்னோவின் 11 அம்னோ பிரதிநிதிகளில் எவரும் கலந்துகொள்ளவில்லை.இதிலிருந்தே அவர்கள் சட்டமன்றத்தில் அச்சட்டம் கொண்டுவரப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

TAGS: