நேற்றிரவு நடைபெற்ற சிலாங்கூர் தேசிய நாள் ஊர்வலத்தில் பங்கு கொள்வதிலிருந்து அரச மலேசியப் போலீஸ் படையும் மலேசிய ஆயுதப் படைகளும் விலகிக் கொண்டன. அந்த நிகழ்வில் பேசுவதற்கு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அனுமதிக்கப்பட்டதே அதற்குக் காரணம் என அவை கூறிக் கொண்டன.
போலீஸ் படை விலகிக் கொள்ளும் தகவலை மாநிலச் செயலாளர் குஸ்ரின் முனாவி கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆட்சி மன்றக் கூட்டத்தின் போது தெரிவித்ததாக மூத்த ஆட்சி மன்ற உறுப்பினரான தெரெசா கோக் கூறினார்.
என்றாலும் இராணுவம் விலகிக் கொள்கிறது என்ற தகவல் கடந்த வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சிலாங்கூர் பொருளாதார மன்றக் கூட்டத்தில்தான் தெரிவிக்கப்பட்டது என்றார் அவர்.
“அரசியல் உரை நிகழ்த்தப்படும் என அவை காரணம் கூறின. மந்திரி புசார் மட்டும் உரையாற்றியிருந்தால் தாங்கள் பங்கு கொண்டிருப்போம் என அவை தெரிவித்ததாக மாநிலச் செயலாளர் சொன்னார்.
ஷா அலாமில் நடந்த அந்த ஊர்வலத்துக்குப் பின்னர் கோக் நிருபர்களிடம் பேசினார்.
“முதலில் ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் பேசலாம் என பக்காத்தான் ராக்யாட் செயலகம் யோசனை தெரிவித்தது. ஆனால் நாங்கள் அதனை நிராகரித்து விட்டோம். சிலாங்கூர் பொருளாதார ஆலோசகர் என்ற முறையில் கூட்டத்தில் உரையாற்றுவதற்கு அன்வார் மட்டும் அனுமதிக்கப்பட்டார்,” என அவர் சொன்னார்.
போலீசும் இராணுவமும் விலகிக் கொண்டது ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் அது ஒர் அரசாங்க நிகழ்வாகும் என சிலாங்கூர் டிஏபி தலைவருமான கோக் தெரிவித்தார்.
“அரசாங்க அதிகாரிகள் என்ற முறையில் அவை அரசாங்கம் முடிவு செய்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது சுதந்திர நாள் கொண்டாட்டங்களாகும். ஆகவே எல்லா உரைகளும் சுதந்திரத்தைப் பற்றியதாகவே இருக்கும்.”
“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்றிரவு புக்கிட் ஜலில் அராங்கில் நிகழ்த்தும் உரை அரசியல் சார்பற்றதாக இருக்காது என அவை சொல்ல வருகின்றனவா ?”
அன்வார் அமைச்சர்களை குறை கூறினார்
பின்னர் மலேசியாகினியிடம் பேசிய அன்வார், ‘அவற்றின் அமைச்சர்கள்’ கொடுத்த உத்தரவின் பேரில் அவை விலகிக் கொண்டிருக்கலாம் எனக் கூறினார்.
“அது நல்லது. கொண்டாட்டங்கள் பெருமிதமாக இருந்தன. போலீசார் ஒத்துழைப்பு வழங்கினர். பங்கு கொள்ள வேண்டாம் என அமைச்சர் அவற்றுக்கு உத்தரவிட்டிருக்கும் சாத்தியம் உண்டு. அவை பங்கு கொண்டிருக்க வேண்டும். இருந்தாலும் பரவாயில்லை.”
உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் போலீசுக்குப் பொறுப்பான அமைச்சர் ஆவார். அகமட் ஸாஹிட் ஹமிடி தற்காப்பு அமைச்சர் ஆவார். அவர்கள் இருவரும் அம்னோ உதவித் தலைவர்களாகவும் இருக்கின்றனர்.
ஷா அலாம் Dataran Kemerdekaan-வில் சிலாங்கூர் நிலையிலான தேசிய நாள், மலேசிய நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அவை ஈராயிரம் மக்களைக் கவர்ந்தன.
வாண வேடிக்கைகளும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஊராட்சி மன்றங்கள் உட்பட 53 அமைப்புக்கள் ஊர்வலத்தில் பங்கு கொண்டன.
கூட்டரசு நிலையிலான ஊர்வலம் இன்று காலை கோலாலம்பூர் ஜாலன் ராஜா-வில் நடைபெற்றன. கொண்டாட்டங்கள் இன்று பிறபகல் 3 மணி தொடக்கம் நள்ளிரவு வரை புக்கிட் ஜலில் தேசிய அரங்கத்தில் நடைபெறுகின்றன.
இரவு 9 மணி வாக்கில் புக்கிட் ஜலில் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.