கடந்த வெள்ளிக்கிழமை அன்வார் சென்ற பஸ் தாக்குதலுக்கு இலக்கானது. நேற்றிரவு அலோர் ஸ்டாரில் பள்ளிவாசல் ஒன்றில் அவர் பேசிக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அந்த நகரில் உள்ள மஸ்ஜித் பூம்போங்கில் நடைபெற்ற அந்த நிகழ்வுக்கு பெர்க்காசாவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகின்றவர்கள் இடையூறு செய்தனர் என்று பிகேஆர் தலைவர்கள் அனுப்பியுள்ள டிவிட்டர் செய்திகள் தெரிவித்தன.
“அந்த tazkirah நிகழ்வின் போது அன்வார் இப்ராஹிமை பெர்க்காசா உறுப்பினர்கள் தாக்குவதாக எனக்கு இப்போது தகவல் கிடைத்தது,” என குவாந்தான் எம்பி பூஸியா சாலே நேற்றிரவு மணி 8.50 வாக்கில் டிவிட்டரில் செய்தி அனுப்பினார்.
“அங்கு அன்வார் உரையாற்றுவதை தடுக்க பெர்க்காசா உறுப்பினர்கள் முயலுகின்றனர்,” என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா டிவிட்டரில் கூறினார்.
“பெர்க்காசா உறுப்பினர்கள் பள்ளிவாசலுக்குள் கல் ஒன்றை எறிந்தனர். அம்னோ ஆதரிக்கும் கலாச்சாரம் இதுதானா ?” என பூஸியாவின் இன்னொரு டிவிட்டர் வினவியது.
“அன்வார் இப்போது பாதுகாப்பாக இமாம் வீட்டுக்குள் இருக்கிறார்,” என உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறினார்.
அந்த எதிர்த்தரப்புத் தலைவர் நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் பயணத்தில் கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கிளந்தானில் அன்வாருடைய Jelajah Merdeka Rakyat bus மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.
பாக்கார் பாக்காவில் maghrib தொழுகையின் போது இரவு மணி 7.45 வாக்கில் தாக்குதல் தொடங்கியதாக அந்தச் சம்பவத்தை நேரில் கண்ட சுரேந்திரன் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.
அந்தத் தொழுகைக்குப் பின்னர் அன்வார் உரையாற்ற தொடங்குவதற்கு சற்று முன்னர் 100 பெர்க்காசா உறுப்பினர்கள் பள்ளிவாசலுக்கு வெளியில் கூடினர்.
அவர்கள் பெர்க்காசா அமைப்பின் டி சட்டைகளை அணிந்திருந்ததால் தாம் அவர்களை அடையாளம் காண முடிந்ததாகவும் சுரேந்திரன் சொன்னார்.
தாம் அந்த நேரத்தில் பள்ளிவாசலுக்கு வெளியில் இருந்ததால் ‘அனைத்தையும் பார்க்க முடிந்தது’ என்றும் அவர் சொன்னார்.
“குழப்பம் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. போலீசாருடன் தொடர்பு கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள் இரவு மணி 8.45க்கு அங்கு வந்து சேர்ந்தனர்,” என அவர் மேலும் கூறினார்.
போலீசார் பெர்க்காசா உறுப்பினர்களுடைய “மூர்க்கத்தனத்தையும் கூச்சல் போடுவதையும்” நிறுத்தாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்ததாகவும் சுரேந்திரன் கூறினார்.