ஆபத்தில் உதவுபவர்கள் ஏழைகளே: அமெரிக்க ஆய்வில் தகவல்

வாஷிங்டன்: ஆபத்து காலத்தில் உடனடியாக உதவுவது, ஏழைகளே என்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட, பேரிடர் தொடர்பான ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:

இயற்கை பேரழிவு ஏற்பட்டால், ஏழைகளே ஒருவருக்கு ஒருவர் அதிகம் உதவி செய்து, பிறரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், வசதி படைத்த பணக்காரர்களோ தமது உடைமைகளை பாதுகாக்கும் முயற்சியில் தான் அதிகம் ஈடுபடுகின்றனர்.

பேரிடர் ஏற்படும் ஆபத்துக் காலத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மை இழந்து விடுவோம் என்ற எண்ணம், பணக்காரர்களிடம் அதிகமாக இருப்பதில்லை. அவர்கள், மேலும் மேலும் பணத்தை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். ஏழைகளோ, தமது நண்பர்களுடனும் மனதுக்கு பிடித்தவர்களுடனும் பொழுதை கழிப்பதில் ஈடுபாடு காட்டுகின்றனர்.

கூடுதல் சம்பளம் கிடைத்தாலும், நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்று வேலை செய்ய ஏழைகள் விரும்புவதில்லை. ஆனால், “உறவுகள் போனாலும், நட்பு போனாலும் கவலையில்லை; பணமே முக்கியம்; அதற்காக எங்கும் செல்லலாம்” என்று வசதி படைத்தோர் நினைக்கின்றனர். இவ்வாறு, அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.