உத்துசான்: ‘புதிய கொடியை’ வடிவமைத்தவர் பிகேஆர் இளைஞர் தலைவர்

மெர்டேகாவுக்கு முன்தினம் டாட்டாரான் மெர்டேகாவில் விரித்துக் காண்பிக்கப்பட்ட Sang Saka Malaya(சாங் சாக்கா மலாயா) என்றழைக்கப்படும் ‘புதிய கொடி’யை வடிவமைத்தவர் பிகேஆர் இளைஞர் பகுதி பிரச்சாரப் பிரிவு துணைத் தலைவர் நஜ்வான் ஹலிமி என்று உத்துசான் மலேசியா கூறுகிறது.

அன்றிரவு நஜ்வான், தம் டிவிட்டர் தளத்தில் பதிவிட்டிருப்பதையும் அந்நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது. அதில் அவர், “இறுதியில் சாங் சாக்கா மலாயாவை இளைஞர்கள் உயர்த்திப் பிடித்தனர்” என்று கூறி இளைஞர்கள் இருவர் அந்தக் கொடியை ஏந்தி நிற்கும் படத்தையும் வெளியிட்டிருந்தார்.

சாங் சாக்கா மலாயாவை இந்த வட்டார நாடுகளான இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கொடிகளைப் பின்பற்றித்  தாம் வடிவமைத்ததாக நஜ்வான், ஆகஸ்ட் 30-இல் தம் வலைப்பதிவில் விளக்கம் அளித்திருப்பதாகவும் அது கூறிற்று.

ஜாலோர் கெமிலாங் இவ்வட்டாரக் கூறுகளைக் கொண்டிருக்கவில்லை, அது அமெரிக்கக் கொடியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது அதனால்தான் அதை ஏற்றுவதற்கு மலேசியர்கள் தயங்குகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தாராம்.

குறைகூறல் தொடர்கிறது

வியாழக்கிழமை இரவு சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த ‘ஜஞ்ஜி டெமோக்ராசி’ பேரணியில் சாங் சாக்கா மலாயா உயர்த்தப்பட்ட சம்பவத்தைக் குறைகூறும் கருத்துகளை உத்துசான் மலேசியா இன்றும் வெளியிட்டிருந்தது.

அத்துடன் அம்னோவுக்குச் சொந்தமான அந்நாளேடு  அதன் செய்தி ஆசிரியர் சுல்கிப்ளி பக்கார் தனியே எழுதிய கட்டுரை ஒன்றையும்  வெளியிட்டிருந்தது. அதில் அவர், அன்றிரவு பண்பாடற்ற முறையில் நடந்துகொண்டவர்கள்மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி “அவர்களை விட்டு விடாதீர்கள்”என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

போலீசார், ‘புதிய கொடி’உயர்த்தப்பட்ட சம்பவத்தை 1948ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் பிரிவு 4(1)(அ)-இன் கீழ் விசாரித்து வருகிறார்கள்.

அதே நிகழ்வில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் ஆகியோரின் படங்களைக் காலில் போட்டு மிதித்தவர்களையும் அவர்கள் தேடி வருகின்றனர்.

 

TAGS: