சிலாங்கூர் மாநிலச் செயலாளர் முகமட் குஸ்ரின் முனாவி, மாநில மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களுக்கு சுல்தான் அழைக்கப்பட்டாரா இல்லையா என்பதை விளக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்தக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாட்டுக் குழுத் தலைவரான குஸ்ரினே அந்த விவகாரத்தை விளக்குவதற்குப் பொருத்தமான மனிதர் என சிலாங்கூர் பாஸ் இளைஞர் துணைத் தலைவர் முகமட் சானி ஹம்சான் கூறினார்.
“தவறு அல்லது கவனக் குறைவு நிகழ்ந்திருந்தால் மந்திரி புசார் வழியாக மாநில அரசாங்கம் அதற்காக அரண்மனையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்,” என்றும் முகமட் சானி சொன்னார்.
ஷா அலாம் டாத்தாரான் Kemerdekaan-ல் நடைபெற்ற மெர்தேக்கா தினத்துக்கு முதல் நாள் கொண்டாட்டங்களில் கவுரவ விருந்தினராக சிலாங்கூர் பொருளாதார ஆலோசகரான அன்வார் இப்ராஹிமை அழைக்க மாநில அரசு முடிவு செய்தது குறை கூறப்படுவது பற்றி முகமட் சானி கருத்துரைத்தார்.
அந்த நிகழ்வில் அன்வார் கலந்து கொண்டது பற்றி சுல்தானுடைய தனிப்பட்ட செயலாளர் முகமட் முனிர் பானியும் கேள்வி எழுப்பினார்.
“அது அரசியல் சார்புடைய நிகழ்வாக இல்லாமல் அதிகாரத்துவ நிகழ்வாக இருக்கும் போது அன்வார் ஏன் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டார் ?” என முகமட் முனிர் வினவினார்.
அத்தகைய நிகழ்வுகளுக்கு அரண்மனைக்கு அழைப்பு விடுப்பது ஒரு சம்பிரதாயமாகும் என்றும் அவர் சொன்னதாக அறிவிக்கப்பட்டது.
மெர்தேக்கா தினத்துக்கு முந்திய நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு சுல்தானை அழைப்பது சிலாங்கூரில் வழக்கமல்ல என மந்திரி புசாருடைய அரசியல் செயலாளர் பாக்கே ஹுசின் நேற்று கூறியிருந்தார்.
அந்த நிகழ்வைத் தொடர்ந்து நடத்தப்படும் tahlil-லில் சுல்தான் கலந்து கொள்வது தான் வழக்கமான நடைமுறை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அம்னோ அரண்மனையைப் பயன்படுத்து சிலாங்கூர் அரசுக்கு எதிராக புதிய சுற்றுத் தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாக முகமட் சானி குற்றம் சாட்டினார்.