சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையத் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் நைம் டாருவிஷ், அரசு சாரா மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகக் கூறப்படுவது மீது தாம் பதவி துறக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் சில மலாய் அமைப்புக்களைச் சாடியுள்ளார்.
கடந்த சில நாட்களாக முகமட் நைம் ராஜினாமா செய்ய வேண்டும் என Jaringan Melayu Malaysia (JMM), Perkasa போன்ற மலாய் அமைப்புக்கள் கோரி வருகின்றன. அது முக்கிய நாளேடுகளில் பெரிய செய்தியாக வெளியிடப்பட்டு வருகின்றது.
உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் மலாய் பத்திரிக்கைகளின் நிருபர்கள் முகமட் நைம்-மிடம் கேள்விகளைத் தொடுத்தனர்.
“JMM, Perkasa போன்ற சில தரப்புக்கள் கடந்த நான்கு நாட்களாக நான் பதவி துறக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு வருகின்றன. ஆனால் அந்த விவகாரம் சிசிஎம் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல,” என்றார் அவர்.
“நான் பதவி விலக வேண்டும் எனக் கேட்டுக் கொள்வது மிகவும் பொறுப்பற்றதாகும். நான் என் வேலையை முறையாகச் செய்து கொண்டிருக்கும் போது நான் ஏன் விலக வேண்டும் ?”
“தயவு செய்து ஆய்வு செய்யுங்கள்”
அந்த அமைப்புக்கள் அத்தகைய கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்னர் பிரச்னையை முதலில் புரிந்து கொள்ள ஒரளவு ஆய்வு செய்ய வேண்டும் என முகமட் நைம் சொன்னார்.
சுவாராமுடன் “தொடர்புடையது” எனக் கூறப்படும் Suara Inisiatif Sdn Bhd-ன் நிதி நிலமையைப் பற்றி மட்டுமே சிசிஎம் புலனாய்வு செய்ய முடியும் என அவர் விளக்கினார்.
சுவாராமை ஆணையம் விசாரிக்க முடியாது. ஒர் அரசு சாரா அமைப்பு என்ற முறையில் சங்கப் பதிவதிகாரி மட்டுமே அதனை புலனாய்வு செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.
“அமைச்சர் சொல்வது போல தயவு செய்து சிறிதளவு ஆய்வு செய்யுங்கள். சிசிஎம் தோற்றத்துக்கு அதுவும் நாங்கள் இனிமேலும் பொருத்தமற்றவர்கள் என சில தரப்புக்கள் சொல்வது மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது,” என்றும் முகமட் நைம் சொன்னார்.