லிம் குவான் எங்: பெர்க்காசா என் படத்தை எரித்ததை என்னவென்று சொல்வது ?

மெர்தேக்கா தினத்துக்கு முந்திய நாளன்று நிகழ்ந்த கொண்டாட்டங்களின் போது பிரதமர் நஜிவ் அப்துல் ரசாக்கின் படத்தை சில தனிநபர்கள் மிதித்ததை டிஏபி கண்டிக்கிறது. அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

என்றாலும் தமது அலுவலகத்துக்கு வெளியில் தமது படத்தை மிதித்து எரியூட்டிய பெர்க்காசா உறுப்பினர்கள் மீது பிஎன் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் வினவினார்.

பிஎன் தேர்வு செய்து வழக்குப் போடும் பழக்கத்தைப் பின்பற்றுகின்றது என்றும் நஜிப் படத்தை மிதித்தவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதின் மூலம் அது இரண்டு வகையான தரத்தைப் பின்பற்றுகின்றது என்றும் லிம் சொன்னார். அவர் பினாங்கு மாநில முதலமைச்சரும் ஆவார்.

பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் மீது அது போன்ற ஆத்திரத்தை மூட்டும் நடவடிக்கைகளில் இறங்கும் பிஎன் ஆதரவாளர்கள் மீது அமைச்சு உறுதியாகவும் விரைவாகவும் நடவடிக்கை எடுக்கும் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் உறுதி அளிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.

“பக்காத்தான் ராக்யாட் தலைவர்களுடைய படங்களுக்கு மரியாதை காட்டாத விரக்தி அடைந்துள்ள அந்த பிஎன் ஆதரவாளர்கள் மீது இது வரை எந்த நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.”

“அவர்கள் என் வீட்டுக்கு வெளியில் என் உருவப்படத்துக்கு ஈமக் கிரியைகளைக் கூட நடத்தியுள்ளனர். அவர்கள் மீது  ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை ?” என லிம் வினவினார்.

மெர்தேக்கா தினத்துக்கு முதல் நாளன்று நஜிப் படத்தை பலர் மிதித்தது பற்றியும் Sang Saka Malaya கொடியைப் பறக்க விட்டது பற்றியும் லிம் கருத்துரைத்தார்.