பகுதி 114ஏ-யைத் தவறாகப் பயன்படுத்துவதில்லை என்ற வாக்குறுதியே வினோதமானது

-Gobind Singh Deo

எம்பி பேசுகிறார்:  ஆதாரச் சட்டம் பகுதி 114ஏ தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இது வினோதமாக இருக்கிறது.பார்க்கப்போனால் இது தேவையற்ற ஒன்று.எந்தச் சட்டமும் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்காக உருவாக்கப்படுவதல்ல.அவ்வாறு செய்தல் சட்டவிரோதமானது.

எனவே,பிரதமர் துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ்(இடம்) அப்படி ஒரு உறுதிமொழியைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

வழக்குகளை விசாரிப்பதிலும் குற்றம் சாட்டுவதிலும் அவருக்கு எந்தப் பொறுப்புமில்லை.ஒரு வழக்கை எப்படி தொடுக்க வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் அவருக்கில்லை. அரசாங்கத்துக்கும் இல்லை.

பிறகு எப்படி அந்த உறுதிமொழியைச் செயல்படுத்தப் போகிறார்கள்?

தவறாகப் பயன்படுத்தப்படாது என்ற உறுதிமொழியுடன் சட்டங்கள் உருவாக்கப்படுவதே நாடாளுமன்றத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயலாகும். அதற்கு இடமளிக்கக்கூடாது.

இப்படிப்பட்ட உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட சட்டங்கள் பிறகு தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கு வரலாற்றில் நிறைய சான்றுகள் உள்ளன.

விக்கிபீடியாவில் தேடிப்பார்த்ததில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்(ஐஎஸ்ஏ) தொடர்பில் இந்தத் தகவல் கிடைத்தது: ‘ஐஎஸ்ஏ-இன் நோக்கம் மலேசியாவில், அவசர காலத்தில் கம்முனிஸ்ட் செயல்களை ஒடுக்குவதாகும்.

‘முதல் பிரதமர் tதுங்கு அப்துல் ரஹ்மான், அச்சட்டத்தின் நோக்கம் பற்றி விவரித்தபோது அச்சட்டம்“கம்முனிஸ்டுகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்படும்….ஐஎஸ்ஏ சட்டப்பூர்வ எதிர்ப்பை ஒடுக்கவோ, சட்டப்பூர்வமான கருத்து மாறுபாட்டை அடக்கவோ முயலாது என்று உறுதி கூறிக்கொள்கிறேன்”.
‘மூன்றாவது பிரதமர் துன் உசேன் ஒன், தம் அரசாங்கம் கம்முனிஸ்டு நடவடிக்கைகளைத் தடுக்க மட்டுமே அச்சட்டத்தை அமல்படுத்தி வந்திருப்பதாகவும் “சட்டப்பூர்வமான அரசியல் எதிர்ப்பையும் குடிமக்களின் நடவடிக்கைகளையும் ஒடுக்குவதற்காக அல்லவென்றும் கூறினார்’.

ஆனால், ஐஎஸ்ஏ சட்டம் பலமுறை அதன் நோக்கத்துக்கு அப்பாற்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதை நாம் அறிவோம்.அது தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.அதன் காரணமாகவே இறுதியில் அது இரத்துச் செய்யப்பட்டது.

ஆக, இப்படிப்பட்ட உறுதிமொழிகள் காக்கப்படுவதில்லை என்பதை அறிந்திருந்தும், நடப்பு அரசாங்கம் மீண்டும் உறுதிமொழி அளிப்பதைப் பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட உறுதிமொழி அளிக்கப்படுவதே சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதை ஒப்புக்கொள்வதாகவும் இருக்கிறது.

எனவே நிலைமைச் சரிபண்ண அரசாங்கம் அதை மீண்டும் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு செல்வதே பொருத்தமானதாகப் படுகிறது.

அவ்விவகாரத்துக்கு நாடாளுமன்றத்தைத் தவிர வேறு யாரும் தீர்வுகாண முடியாது.

============================================================================================

GOBIND SINGH DEO-பூச்சோங் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர்

 
 
 
 

.

TAGS: