மலேசியாவில் 800 மில்லியன் ரிங்கிட் செலவில் தான் அமைத்துள்ள அரிய மண் தொழில் கூடம் இயங்குவதற்கு தற்காலிக நடவடிக்கை அனுமதி கிடைத்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் லினாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதனால் உற்பத்தி அக்டோபர் மாத வாக்கில் தொடங்கும் என அது கூறியது.
குவாந்தானில் அமைந்துள்ள அந்தத் தொழில் கூடம் கடந்த மே மாதத்திலிருந்து இயங்குவதற்கு தயார் நிலையில் இருந்து வருகின்றது. அந்த தொழில் கூடத்தின் கட்டுமானப் பணி ஈராண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டதிலிருந்து உள்ளூர் மக்களுடன் சுற்றுச்சூழல், பாதுகாப்பு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருந்தது.
அந்த அரிய மண் தொழில் கூடத்திலிருந்து கதிரியக்க கழிவுகள் வெளியாகக் கூடும் என்ற அச்சத்தினால் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்டனர்.
இவ்வாண்டு நிகழும் என எதிர்பார்க்கப்படும் தேர்தலிலும் அது சூடான பிரச்னையாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது.
அரசாங்கக் குழு ஒன்று பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து மலேசிய அணு எரிசக்து அனுமதி வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
“அந்த வாரியத்திடமிருந்து அனுமதி கிடைத்துள்ளது லினாஸுக்கு குறிப்பிடத்தக்க மைல்கல்,” என லினாஸ் நிர்வாகத் தலைவர் நிக்கோலஸ் கேர்ட்டிஸ் ஒர் அறிக்கையில் கூறினார்.
அரிய மண் பாளங்களை பதனீடு செய்யும் பணிகள் அக்டோபரில் தொடங்கும் என்றும் லினாஸ் தெரிவித்தது.
விவேகத் தொலைபேசிகள் முதல் hybrid கார்கள் வரையில் பல வகையான பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் அரிய மண் மீதான சீனாவின் பிடியை உடைப்பதற்கான முயற்சிகளில் அந்த தொழில் கூடம் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
-ராய்ட்டர்