2003ம் ஆண்டுக்கு பின்னர் மெர்தேக்கா தினத்துக்கு முந்திய நாள் கொண்டாட்டங்களில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்ளுமாறு சுல்தானை முன்னைய சிலாங்கூர் அரசாங்கம் அழைத்ததற்கான பதிவேடுகள் ஏதுமில்லை என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறுகிறார்.
2003ம் ஆண்டுக்குப் பின்னர் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி ஊர்வலத்துடன் நடத்தப்பட்ட மெர்தேக்கா பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கு மட்டும் சுல்தான் அழைக்கப்பட்டார் என அவர் சொன்னார்.
“சுல்தான் அழைக்கப்பட்டதை காட்டும் கடிதங்கள் எதனையும் நாங்கள் காணவில்லை. ஒரு வேளை முந்திய நிர்வாகம் அவற்றை எரித்திருக்கலாம். நாங்கள் இன்னும் அவற்றைத் தேடிக் கொண்டிருக்கிறோம்,” என்றார் காலித்
இவ்வாண்டு ஆகஸ்ட் 30ம் தேதி நிகழ்ந்த தேசிய நாள் கொண்டாட்டங்களுக்கு சிலாங்கூர் சுல்தானை அழைக்காததற்காக மாநில அரசாங்கம் கடுமையாக குறை கூறப்பட்டு வருகின்றது.
தாம் பதவி காலத்தில் வாய்மொழியாகவும் கடிதம் வாயிலாகவும் மாநிலத்தின் தேசிய நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு எப்போதும் அழைக்கப்பட்டு வந்ததாக முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் கிர் தோயோ கூறிக் கொண்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய நாளை ஒட்டி நடத்தப்படும் திருக்குர் ஆன் ஒதும் நிகழ்ச்சிக்கும் தொழுகைக்கும் சுல்தான் அழைக்கப்பட்டு வந்துள்ளதை மாநில அரசாங்கப் பதிவுகள் காட்டுவதாக காலித் மாநில ஆட்சி மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.