இன்றைய இளைஞர்கள் சுதந்திரம் தானாக வந்ததாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் அண்மையில் ‘ஜஞ்ஜி டெமோக்ராசி பேரணி’யில் கலந்துகொண்டவர்கள் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதற்கு காரணம் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
அதில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் பதின்ம வயதினர், இளம் நிபுணர்கள். அந்நிய ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்த அனுபவம் அவர்களுக்கு இல்லை.
“அவர்களில் பலர் 55 வயதுக்குக் குறைந்தவர்கள். அந்நிய ஆட்சி பற்றி அவர்கள் அறிய மாட்டார்கள். மெர்டேகா தானாக கிடைத்ததாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள்.
“அதை மதிக்கத் தெரியவில்லை. ஏனென்றால் நாம் எப்போதும் சுதந்திரமாக இருந்து வந்திருப்பதாகவே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்”. இன்று, டிஆர்பி-ஹைகோம் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்ட பின்னர் மகாதிர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
அப்பேரணியில் சிலர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் முதலிய பெருமக்களின் படங்களைத் தரையில் போட்டுக் காலால் மிதித்தல் போன்ற அருவறுக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டார்கள்.
தனியார் கல்லூரியில் பயிலும் 19-வயது மாணவர் ஒருவர் தம் கால்சட்டையைக் கீழிறக்கி தன் பிட்டத்தை பிரதமர் மற்றும் அவரின் துணைவியாரின் படங்களை நோக்கிக் காண்பித்தார்.
-பெர்னாமா