என்எப்சி நிறுவனங்கள்மீது சிசிஎம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மலேசிய நிறுவனங்கள் ஆணையம்(சிசிஎம்), சட்டமீறலில் ஈடுபட்ட அம்னோ-தொடர்பு நிறுவனங்கள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சுவாராம் அலுவலகத்தில் மட்டும் அதிரடிச் சோதனை நடத்திய செயல் அரசியல் நோக்கம் கொண்டது என்கிறார் டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா. 

“அம்னோ,வலச்சாரி அமைப்புகளான ஜாரிங்கான் மலாயு மலேசியா((ஜேஎம்எம்), பெர்காசா போன்றவற்றின் அழுத்தத்துக்கு இணங்கி அரசுத்துறைகள் குறிப்பாக சிசிஎம் மேற்கொண்ட நடவடிக்கை பாரபட்சமானது”,என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

முன்னாள் அமைச்சர் ஷரிசாட் அப்துல் ஜலில் குடும்பத்தாருக்குச் சொந்தமான நேசனல் பீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உள்பட நிறுவனச் சட்டத்தை மீறிய பல நிறுவனங்களைத் தாம் அம்பலப்படுத்தி இருப்பதாக புவா(வலம்) கூறினார். 

“எடுத்துக்காட்டுக்கு என்எப்சி அதன் இயக்குனர்களுக்கு நேரடிக் கடன்கள் வழங்கியுள்ளது. இது நிறுவனச் சட்டத்தின் 133, 133ஏ பிரிவுகளை மீறிய செயலாகும்.அவை அப்படிப்பட்ட கடன்கள் வழங்குவதைத் தடை செய்கின்றன.

“அக்குடும்பத்துக்குச் சொந்தமான மற்ற நிறுவனங்களான நேசனல் மீட் எண்ட் லைப்ஸ்டோக் சென். பெர்ஹாட், ரியல் ஃபூட் கம்பெனி சென்.பெர்ஹாட், மீட்வோர்க்ஸ் சென்.பெர்ஹாட் ஆகியவை அவற்றின் ஆண்டுக்கூட்டத்தை நடத்தவில்லை, ஆண்டுக் கணக்கறிக்கையை நிறுவனப் பதிவகத்தில் தாக்கல் செய்யவில்லை.

“இவை, நிறுவனச் சட்டம் பிரிவு 169ஏ-ஐ மீறிய செயலாகும்.இதற்கு ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை அல்லது ரிம30,000அபராதம் அல்லது இரண்டு சேர்த்து விதிக்கப்படலாம்”.

இன்னொரு நிறுவனம், அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், அம்னோவின் கோத்தா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டாஹ்லான் ஆகியோரை இயக்குனர்களாகக் கொண்ட Yayasan Gerakbakti Kebangsaan (YGK),2009-இலிருந்து கணக்கறிக்கையைத் தாக்கல் செய்ததில்லை என்றும் புவா கூறினார்.

“ஆறு மாதங்களுக்குமுன்பே இவற்றின் வண்டவாளத்தை அம்பலப்படுத்தியபோதும், இன்றுவரை சிசிஎம் நடவடிக்கை எடுக்காமலிருப்பது ஏன்?

“மறுபக்கம்,சிசிஎம்மும் மற்ற அரசு அமைப்புகளும் எந்தக் குற்றமும் செய்யாத சுவாராம் மீது மட்டும் குற்றம் சாட்ட துடியாய் துடிப்பது ஏன்?”,என்று புவா வினவினார்.

சுவாராம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தொடர்புப்படுத்தும் பல பில்லியன் ரிங்கிட் பெறுமதியுள்ள ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக் கப்பல் ஊழலை வெளிப்படுத்தியதுதான் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்குக் காரணம் என்றவர் கருதுகிறார்.

“சிசிஎம், அரசியல் நோக்கம் கொண்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.அவ்வாறு செய்தால் பாரபட்சமற்ற அமைப்பு என்ற அதன் பெயர்தான் கெட்டுப்போகும்.

“சுவாராம்மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அம்னோ தலைவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் அவர்களுக்கு வேண்டியவர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”, என்று புவா கூறினார்.

உறுதிமொழிக்கு மதிப்பில்லை

நேற்று சிசிஎம் அதிகாரிகள், சுவாரா இனிஷியேடிப் சென்.பெர்ஹாட்டின் செயலாளர் மற்றும் கணக்காய்வாளரின் அலுவலகங்களில் சோதனை நடத்தி அந்நிறுவனம் தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றினர்.

சுவாராம், நாட்டின் முன்னணி மனித உரிமை என்ஜிஓ-ஆக இருந்தாலும் சுவாரா இனிஷியேடிப் பெயரில் ஒரு நிறுவனமாகத்தான் தன்னைப் பதிவு செய்துகொண்டிருக்கிறது.

அது முழு ஒத்துழைப்பு வழங்குவதாக ஜூலை 20-இல், எழுத்துமூலமாக சிசிஎம்முக்கு உறுதி வழங்கியிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அந்த அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சொக்சோ சந்தாவைக் கையாளும் பெர்கோசாகூட சில ஆவணங்களைப் பட்டியலிட்டு அவற்றை ஆகஸ்ட் 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என சுவாராமுக்கு உத்தரவிட்டது.

அதற்கேற்ப, சுவாராம் அந்த ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைத்தது.ஆனால், அந்த அதிகாரிக்கு சுவாராம் என்ற ஒன்று இருப்பதே தெரியவில்லை.அதுதான் வேடிக்கை.