தீவிரவாத எண்ணங்களினால் பிரச்னை இல்லை என்கிறார் டாக்டர் மகாதீர்

தீவிரவாதமாக உள்ள கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுமாறு மற்றவர்களைக் கட்டாயப்படுத்தாமல் இருக்கும் வரை அத்தகைய கருத்துக்களைக் கொண்டிருப்பது சரியே என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார்.

“அது தீவிரவாதமாக மட்டும் இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் நாம் விரும்புவதை மற்றவர்கள் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தும் நடவடிக்கை அந்தத் தீவிரவாதக் கருத்துக்குப் பின்னால் தொடருவது தேவையற்றது.”

அவர் இன்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் மூவாயிரம் மாணவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்வில் பேசினார்.

குறை கூறுவதற்கு ஒருவருக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ அந்த அளவுக்கு அதனை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது மற்ற தரப்பின் உரிமை என மகாதீர் மேலும் சொன்னார்.

தனது சக மாணவர்கள் தங்களது நோக்கங்களுக்குப் போராடும் போது அரசாங்கம் செய்கின்ற அனைத்தும் தவறானது எனக் கருதும் அளவுக்கு “தீவிரமாக உணர்ச்சி வசப்படுவது” தாம் வருத்தம் அடைந்துள்ளதாக குறிப்பிட்ட மாணவர் ஒருவருக்கு பதில் அளித்த மலாய் உரிமை நெருக்குதல் அமைப்பின் புரவலருமான மகாதீர் சொன்னார்.

மலாயாப் பல்கலைக்கழகமும் அரசாங்க ஆதரவு மாணவர் அமைப்பான Aspirasi-யும் இணைந்து இன்றைய கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தன. அமைதியான பல்கலைக்கழக வளாக இயக்கத்தை Aspirasi அமைப்பு நடத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கலந்துரையாடல் அமைந்திருந்தது.

இந்த நிகழ்வில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சார்ந்த மூவாயிரம் மாணவர்கள் பங்கு கொண்டனர். அத்துடன் மேலும் இதர 11 பொதுப் பல்கலைக்கழகங்களில் அந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

TAGS: