மாணவனின் தந்தையைச் சந்திக்கப் பிரதமர் தயார் ஆனால்…

ஆகஸ்ட் 30ம் தேதி மெர்தேக்காவுக்கு முந்திய தினத்தன்று ஜாஞ்சி டெமாக்கரசி கூட்டத்தின் போது ஆபாசமான முறையில் கல்லூரி மாணவர் ஒருவர் நடந்து கொண்டது தொடர்பில் அந்த மாணவருடைய தந்தையைச் சந்திக்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தயாராக இருக்கிறார்.

நஜிப், அவரது மனைவி, தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிச் முகமட் யூசோப் ஆகியோரது படங்களை அந்த 19 வயது மாணவன் மிதித்து  தனது பிட்டத்தைத் திறந்து காட்டியது கேமிராவில் பதிவாகியுள்ளது.

“எந்தப் பிரச்னையும் இல்லை. நான் யாரையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் சட்ட அமலாக்கத்தில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. அது தொடர வேண்டும். அவர் (மாணவனின் தந்தை) என்னைச் சந்திக்க விரும்பினால் அதற்கு எந்த நேரத்திலும் ஏற்பாடு செய்யலாம்,” என நஜிப் பெசுட்டில் கம்போங் தாசெக் தோக் லெபாயில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட பின்னர் கூறினார்.

தமது புதல்வருடைய மனதைப் புண்படுத்தும் நடத்தைக்காக நஜிப்பிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்க தந்தை விரும்புவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் நஜிப் சொன்னார்.

 

TAGS: