மலேசிய இந்து சங்கம் ஆகம முறையிலான ஆலய வழிபாட்டுக்குரிய வழிகாட்டுதலை அனைத்து ஆலயங்களுக்கும் வழங்கிட தேசிய இந்து ஆலய மாநாட்டை அண்மையில் தலைநகர், செராசில் உள்ள DBKL மண்டபத்தில் நடத்தியது.
நாடு முழுவதிலும் இருந்து சுமார் 800 ஆலயப் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். மண்டப வாடகைக்கு 4,660 ரிங்கிட்டும், அன்றைய நாளில் மண்டப ஊழியர்கள் வழங்கும் பராமரிப்பு சேவைக்கு 300 ரிங்கிட்டும், டி.பி.கே.எல்லுக்கு ‘உரிய கேட்டரஸிடம்’ உணவுக்குப் பதிந்துகொள்லாமல் வேறு உணவகத்தில் இருந்து சொந்தமாக சைவ உணவு வரவழைப்பதற்கு 500 ரிங்கிட்டும் வழங்கப்பட்டன.
வாழை மரத்திற்குக்கூட திடீர் தடை!
மாநாடு சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் முதல் நாள் ஒரு திடீர் தடையை விதித்தது DBKL! அதாவது பண்பாடு, சமயம், கலாச்சாரம் தொடர்பான எத்தகைய அலங்காரச் சின்னமும் மண்டபத்திலும், வெளி வளாகத்திலும் இருக்கக் கூடாது என்பதுதான் அது!
இந்த கடைசி நேர உத்தரவால் இந்து சங்கத்திற்கு பல சிக்கல்கள் ஏற்பட்டன. தரையில் வண்ண கோலம் போட இயலவில்லை. வாழை மரங்கள் கட்ட முடியவில்லை. ஏன்? மாவிலை தோரணத்திற்கும் கூட தடை விதிக்கப்பட்டது. மேடையில் கோபுரத்தின் சாயலில் ஒரு வண்ணப் பலகை வைப்பதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அது மட்டுமா? வெளி வளாகத்தில் நிகழ்வு நடைபெறும் இடத்தை சுட்டிக்காட்டும் பதாகையை தொங்கவிடுவதற்கும் இயலாமல் போனது!
சங்கத்தின் கோரிக்கைகளும், வேண்டுகோளும் டி.பி.கே.எல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன. இதனால் மாநாட்டின் தோற்றம் எத்தகைய கலையம்சமும் இன்றி வெறுமனே காட்சியளித்தது.
பிரதமரின் பிரதிநிதியாக ஓர் அமைச்சர் கலந்துகொள்ளும் ஒரு மாபெரும் நிகழ்ச்சியில் இத்தகைய அவமரியாதையான சூழலை சங்கம் எதிர்நோக்கியது மிகவும் வருந்தத்தக்கது. ஒரு தேசிய மாநாட்டிற்கு முதல் நாள் டி.பி.கே.எல். நடந்து கொண்ட விதம் பிரதமரின் ஒரே மலேசியா கோட்பாட்டுக்கு குந்தகம் விலைவிப்பது போல் இருந்தது!
டி.பி.கே.எல் எல்லா மலேசியர்களுக்கும் சேவையாற்றக் கூடிய ஒரு பொது அமைப்பு! அது ஏன் இந்து சங்கத்திடம் இவ்வளவு பாராபட்சம் காட்ட வேண்டும்? அந்த மண்டபத்தில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் எத்தகைய அலங்காரமும் அனுமதிக்கப்படுவதில்லை எனில், மண்டபத்தை வாடகைக்குப் பதிவு செய்யும் போதே சங்கத்திற்குத் தெரியப்படுத்தி இருக்கலாமே! முதல் நாள் வந்து குழறுபடி செய்வதா?
டி.பி.கே.எல்.லின் இப்போக்கு மலேசிய இந்தியர்களின் கலாச்சாரப் பாரம்பரியங்களை அது உதாசினப்படுத்தும் தோற்றத்தையே பிரதிபலிக்கின்றது. அம்மாநாட்டிற்கு நாடு முழுவதிலிருந்தும் வந்திருந்த பேராளர்கள் மிகுந்த கோபமும் வேதனையும் அடைந்தனர்.
டி.பி.கே.எல். என்பது கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வு துணை அமைச்சர் எம். சரவணனின் நிர்வாகத்தின் கீழ் இருந்தும், இந்து சங்கத்தின் மீது இப்படி ஒரு உதாசீனமா?
மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியம், ஆலய கையேடு வெளியீட்டு விழா செலவினங்களுக்கு ம.இ.கா பொருளாதார உதவி நல்குவதாக அறிவித்தார்.
மரியாதை முன்னே, மானியம் பின்னே!
இந்திய சமூகத்துக்கு முதலில் கிடைக்க வேண்டியது உரிய மரியாதை! பிறகுதான் மானியம்!
எந்நேரத்திலும் எவ்விடத்திலும் எத்தரப்பினரிடமும் உண்மையான மரியாதையும் மனிதாபிமானம் நிலவினால்தான் ‘ஒரே மலேசியா’ உரிய மாண்பைப் பெறும்! இல்லையெனில் தேர்தலுக்கான ஒரு மாயா ஜாலமாகாவே அது மக்களால் கருதப்படும்.
—————————————————————-
-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், செப்டெம்பர் 6, 2012.