பக்காத்தான் என்றென்றும் ஆட்சி புரிய விரும்பக் கூடும் என எச்சரிக்கிறார் மகாதீர்

தேசிய தலைமைத்துவத்தை மாற்றி சோதனை செய்ய விரும்பும் மக்களை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சாடியுள்ளார்.

பக்காத்தான் ராக்யாட்டுக்கு ஆட்சி புரிவதற்கு வாய்ப்பு கொடுத்தால் அது ஆட்சியை ஒரு போதும் கை விடாது என அவர் எச்சரித்தார்.

“அவற்றுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கலாம் என்றும் அவை நல்லபடியாக இயங்கவில்லை என்றால் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பிஎன் மீண்டும் ஆட்சிக்கு வர வாக்களிப்போம் என்றும் சிலர் சொல்கின்றனர்.”

“ஆனால் அதிகாரத்துக்கு வந்ததும் பிஎன் மீண்டும் ஆட்சிக்குத் திரும்பாமல் இருக்க அவை தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும்,” என நேற்று கோலாலம்பூர் பங்சாரில் அரசாங்க ஓய்வூதியக்காரர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் மகாதீர் கூறினார்.

அப்போது எல்லாம் மிகவும் காலதாமதமாகி விடும். அதிகாரத்துக்கு பிஎன் மீண்டும் திரும்புவதற்கு வழியே இருக்காது. பிஎன் இந்த நாட்டுக்குக் கொண்டு வந்த எல்லா நன்மைகளும் முடிவுக்கு வந்து விடும் என அவர் எச்சரித்தார்.

மக்கள் பிஎன் தங்களுக்கு செய்துள்ள நன்மைகளுக்காக நன்றியுடன் இருக்க வேண்டும் எனக் கூறிய மகாதீர், அடுத்த பொதுத் தேர்தலில் அதிகமான பெரும்பான்மையுடன் பிஎன் வெற்றி பெற கடுமையாக உழைக்குமாறும் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

‘எதிர்க்கட்சிகள் தூண்டும் வெறுப்புணர்வு நாட்டுப் பற்றைச் சீர்குலைக்கிறது’

அண்மைய மெர்தேக்கா தினத்தைக் கொண்டாடும் வகையில் மலேசியர்கள் தேசியக் கொடிகளைப் பறக்க விடாததற்கும் அந்த முன்னாள் பிரதமர் எதிர்க்கட்சிகளையே சாடினார். தேசியக் கொடிகளை பறக்க விடாதது மக்களிடையே நாட்டுப் பற்றுணர்வு குறைந்து வருவதற்கான அறிகுறிகள் என கூறப்பட்டுள்ளது.

“அதற்கு எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களே காரணம். அவர்கள் இந்த நாட்டுக்கு விசுவாசமாக இல்லை. ஆனால் அவர்கள் தங்கள் கட்சிக்கு விசுவாசமாக இருக்கின்றனர்.”

அவ்வாறு விசுவாசம் பிளவுபட்டதால் தேசியக் கொடி எப்படி இருக்க வேண்டும் எனச் சிலர் தங்கள் சொந்தக் கருத்துக்களை உருவாக்கிக் கொண்டுள்ளதாக மகாதீர் வாதாடினார்.

இந்த நிலைமை தொடருமானால் விரைவாகவோ பின்னரோ நாட்டுக்கு ஐக்கியச் சின்னம் ஏதும் இல்லாத சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்தார்.

TAGS: