பதின்மவயதினர் விலங்கிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து துணை அமைச்சர் ஐஜிபிக்குக் கடிதம்

இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் கான் பிங் சியு, பிரதமரின் புகைப்படத்தைக் காலில் போட்டு மிதித்ததாகக் கூறப்படும் 19-வயது ஒங் சின் ஈ-க்குப் போலீஸ் விலங்கிட்டு வைத்திருந்ததற்கு ஆட்சேபணை தெரிவித்து போலீஸ் தலைவர் இஸ்மாயில் ஒமாருக்குக் கடிதம் எழுதுவார்.

போலீஸ், அவர்களின் நடைமுறைகளை (எஸ்ஓபி), குறிப்பாக பெண்கள்,பதின்ம வயதினர், முதியவர்கள், வன்முறை சாராதவர்கள், தாமே முன்வந்து சரணடைவோர் போன்றோரைக் கைது செய்வதில் பின்பற்றப்படும் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என செனட்டரான கான் விரும்புகிறார்.

ஒங் ஜோகூர் பாரு செண்ட்ரல் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தபோது அவருக்கு விலங்கிடப்பட்டது பற்றிக் கருத்துரைத்தபோது கான் இவ்வாறு கூறினார்.

நேற்றிரவு விடுத்த அறிக்கையில், அந்தப் பதின்ம-வயதுப் பெண்ணுக்கு விலங்கிட்டிருக்க வேண்டியதில்லை என்று  அவர் கூறினார்.

“இதுபோன்ற நேரங்களில் மேலும் மனிதாபிமான முறையில் போலீஸ் நடந்துகொள்ள வேண்டும்”.

போலீசார் மக்களுடன் நட்புறவாக பழகுவதும்  குற்றச்செயல்களைத் தடுக்க அமைப்புகளுடன் ஒத்துழைப்பதும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதாக, மசீச உதவித் தலைவருமான கான் கூறினார்.

“எனவே,போலீசார் இந்த நவீன யுகத்தில் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கைது செய்யும் நடைமுறைகளில் பொருத்தமான திருத்தம் செய்வதற்கு இது ஏற்ற தருணமாகும்”.

அதே வேளை இளைஞர்கள், தங்கள் கருத்துகளையும் அதிருப்திகளையும் வெளிப்படுத்த பண்பாடற்ற, இழிவான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கான் அறிவுறுத்தினார்.

TAGS: