ஹூஸ்டன்: இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அதிக நேரம் விண்வெளியில் நடந்த பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அனைத்துலக விண்வெளி மையத்தின் மின்சக்திப் பகுதியில் ஏற்பட்டிருந்த கோளாறைச் சரிசெய்ய 32-வது விண்வெளிக் குழுவை நாஸா அனுப்பியது. இக்குழுவில் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பயணித்தார்.
இவர், ஜப்பானைச் சேர்ந்த சக விண்வெளி வீரர் அகிஹிகோ ஹொஷிடேவுடன் இணைந்து விண்வெளியில் நடந்து சென்று, பிரதான மின்சக்திப் பகுதியைச் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டார். கடந்த வாரம் வியாழக்கிழமை 8 மணி நேரம் விண்வெளியில் நடந்த படி மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
இந்நிலையில், இருவரும் இரண்டாவது முறையாக புதன்கிழமை 6 மணி நேரம் 28 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து, பிரதான மின்சக்திப் பகுதியில் ஏற்பட்டிருந்த பிரச்னையைச் சரிசெய்தனர்.
இதுவரை 6 முறை மேற்கொண்ட பயணங்களின் மூலம் 44 மணி நேரம் 2 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து, அதிக நேரம் விண்வெளியில் நடந்த பெண் வீராங்கனை என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் தன்வசமாக்கினார்.
முன்னதாக, பெக்கி விட்சன் என்ற விண்வெளி வீராங்கனை 6 முறை பயணித்து 39 மணி நேரம் 49 நிமிடங்கள் நடந்ததே சாதனையாக இருந்தது. சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸன்க்கு பெக்கி விட்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.