பிஎன்னுக்கு மட்டும் என்றென்றும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற விருப்பம் இல்லையா?

உங்கள் கருத்து “நாட்டின் தலைமைத்துவத்தைத் தீர்மானிக்கும் உண்மையான ஜனநாயக உரிமை மக்களிடம் இருக்கும்வரை எவரும் என்றென்றும் ஆட்சியில் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.”

பக்காத்தான் என்றென்றும் ஆட்சியில் இருக்க விரும்பும்,எச்சரிக்கிறார் மகாதிர்

ஃபாஸ்: இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் என்னால் ஒத்துப்போக முடியாது.ஆட்சியை விட்டுவிலக மாட்டார்கள் என பக்காத்தான் குறித்து நீங்கள் சொன்ன கருத்து அம்னோ-பிஎன்னும் பொருந்தும்.

அம்னோ-பிஎன்னால் மட்டுமே நல்லது செய்ய முடியும் என்ற தங்கள் கருத்து விவாதத்துக்கு உரியது.நாளுக்கு நாள் ஆளும் கூட்டணியின் ஊழல் விவகாரங்கள் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன.

எஸ்பி: என் பிள்ளைப் பருவத்தில் நான் மிகவும் விரும்பும் பிரதமராக இருந்தீர்கள்.எங்களைப் பொறுத்தவரை நீங்கள் தவறு செய்ய மாட்டீர்கள் என்ற எண்ணம் வலுவாக வேரூன்றியிருந்தது.ஆனால் வயது ஆக ஆக அந்த எண்ணம் மாறி வருகிறது.

சில நேரங்களில் நீங்கள் வாயைப் பொத்திக்கொண்டிருப்பதே நல்லது எனத் தோன்றுகிறது.நீங்கள் நாட்டின் நலனை அல்லது அதன் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு பேசுவதாகத் தெரியவில்லை. உங்கள் பேச்சு நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதை அடைய முடியாதபடி செய்து விடும்போல் தெரிகிறது.

எவரும் என்றென்றும் பதவியில் இருந்துகொண்டிருக்க முடியாது. எங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பை எங்களிடமே விட்டு விடுங்கள்.

ஒய்எப்:நீங்கள் ஒழுங்காக இருந்திருந்தால் மக்களின் கோபத்தை எண்ணிக் கலங்க வேண்டியதில்லை. ஆனால், உங்களின் தீய நடவடிக்கைகள் இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளதால் அஞ்சுகிறீர்கள்.

லின்குவான்: ஒப்புக்காக ‘உருமாற்றம்’ என்று சொல்லிக்கொண்டிராமல், பக்காத்தான் ரக்யாட் தன்னால் நாட்டுக்கு நல்லது செய்ய முடியும் என்பதைச் செய்து காட்டினால் அது ஏன் என்றென்றும் ஆட்சியில் இருக்கக்கூடாது?

வீரா: அடுத்த தேர்தலில் தோற்றால்கூட அம்னோ ஆட்சியை விட்டுக்கொடுக்காது என்றுதான் அஞ்சுகிறோம். நஜிப்பே சொல்லவில்லையா, “சகோதர, சகோதரிகளே,  நம் உடல்கள் நசுங்கினாலும் உயிரே போனாலும், கவலையில்லை, புத்ரா ஜெயாவைப் பாதுகாக்க வேண்டும்”, என்று. 

அதனால் ஜனநாயகத்தைக் காக்க  விரும்பும் நீங்கள் பக்காத்தானை விட அம்னோவை நினைத்துத்தான் அதிகம் கவலையுற வேண்டும்.

தப்பிப்பிழைத்தவன்: துன் டாக்டர் மகாதிர் அவர்களே, நீங்கள் உள்ளவரை எங்கள் ஆதரவு பக்காத்தானுக்கே. பிஎன்னை ஒழிக்க அது ஒன்றுதான் வழி.

உங்களின் 22ஆண்டு ஆட்சியில் பெருமைப்படத்தக்க விசயங்கள் உண்டு. ஆனால் அவற்றைவிடவும் கேடுகள் அதிகம்.

பக்காத்தானால் நாட்டுக்கு நல்லது செய்ய முடிந்தால் அது ஏன் என்றென்றும் ஆட்சியில் இருக்கக்கூடாது? அவர்கள் அதைச் செய்யத் தவறினால் அல்லது பதவியைத் தப்பாக பயன்படுத்தினால் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும்.

பெர்ட்:பிஎன், 55ஆண்டுகளுக்குமேல் ஆட்சியில் இருந்துகொண்டு ஊழலையும் இனவாதத்தையும் ஊக்குவித்துக்கொண்டும் வேண்டியவர்களுக்குச் சலுகைகள் செய்துகொண்டும் இருக்கவில்லையா? இன்னும் பேராசை விடவில்லையே.

ரேஃபயர்: நாட்டின் தலைமைத்துவத்தைத் தீர்மானிக்கும் உண்மையான ஜனநாயக உரிமை மக்களிடம் இருக்கும்வரை எவரும் என்றென்றும் ஆட்சியில் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.

 

 

 

TAGS: