தாயிப்: தலைமைத்துவத்தை மாற்ற அவசரப்பட வேண்டியதில்லை

சரவாக்கில் அவசரப்பட்டு தலைமைத்துவ மாற்றம் செய்யப்பட்டதில்லை. அதனால்தான் சரவாக் மக்கள் அமைதியையும் அரசியல் நிலைத்தன்மையையும் திட்டமிட்ட மேம்பாட்டையும் அனுபவித்து வருகிறார்கள் என்கிறார் அம்மாநில முதலமைச்சர் அப்துல் தாயிப் முகம்மட்.

49 ஆண்டுகளுக்குமுன் சரவாக் மலேசியாவில் சேர்ந்ததிலிருந்து அம்மாநிலத்தில் ஐந்து யாங் டி பெர்துவான் நெகிரிகள், நான்கு முதலமைச்சர்கள் பொறுப்பேற்று விட்டார்கள். மேம்பாட்டுக்குத் திட்டமிடுதலிலும் அதைச் செயல்படுத்துவதிலும் ஒரு தொடர்ச்சி இருந்து வந்துள்ளது.

“மக்களின் தேவைக்கேற்ப அமைதியும் நிலைத்தன்மையும் நீடிக்க தலைமைத்துவத்தை மாற்றுவதில் அவசரம் கூடாது”.தாயிப், மீரி விளையாட்டு அரங்கில் சரவாக் யாங் டி பெர்துவா துன் அபாங் முகம்மட் சலாஹுடின் அபாங் பரியிங்கின் 91வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற அணிவகுப்பில் உரையாற்றினார்.

கடந்த ஆண்டு மாநிலத் தேர்தலில் மக்கள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வழங்கியதை அடுத்து சரவாக் பிஎன் அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருவதாக அவர் சொன்னார்.

“மாற்றங்கள் திட்டமிடப்பட்ட முறையில் நடந்துள்ளன.வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன”.அரசு வெற்று வாக்குறுதிகளை வழங்கவில்லை, செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்குச் சான்றுகள் உண்டு என்றாரவர்.

பார்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து(பிபிபி)சரவாக்கின் தலைவருமான தாயிப், கட்சி கல்வித் தேர்ச்சிபெற்ற இளைஞர்களைச் சேர்த்து வருவதாகவும் அவர்களிலிருந்து வருங்காலத் தலைவர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அந்நிகழ்வில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். துன் அபாங் முகம்மட் சலாஹுடினின் வயதுக்கு இணையாக 91குழுக்கள் அணிவகுப்பில் பங்கேற்றன.

-பெர்னாமா

TAGS: