எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-உடன் பல விஷயங்களில் ஒத்துப் போவதில்லை என்றாலும் அம்னோ-பிஎன்தான் பிசாசு என அவர் சொன்னதை ஒப்புக் கொள்வதாகக் கூறுகிறார்.
“நான் பல விஷயங்களில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-உடன் இணக்கமாக இல்லை. எடுத்துக்காட்டுக்கு அவரது புதல்வருக்கு பீர் நிறுவனம் சொந்தமாக இருக்கிறது என்ற உண்மையை நான் ஒப்புக் கொள்ளவில்லை.”
“என்றாலும் அம்னோ-பிஎன்தான் பிசாசு என்றும் பக்காத்தான் ராக்யாட் தேவதை என்றும் அவர் சொன்ன அண்மைய அறிகையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.’
“நமக்குத் தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் நாம் பிசாசை (அம்னோ-பிஎன்) ஆதரிக்க முடியாது. ஆனால் பக்காத்தான் ராக்யாட்-உடன் (தேவதை) நாம் பாதுகாப்பாக இருப்போம்.”
அன்வார், நேற்றிரவு நெகிரி செம்பிலான் ரந்தாவில் ஆயிரம் பேர் கலந்து கொண்ட ‘Jelajah Merdeka Rakyat’ செராமாவில் பேசினார்.
உங்களுக்குத் தெரியாத தேவதையை விட தெரிந்த பேயை ஆதரிப்பதே நல்லது என மகாதீர் அண்மையில் விடுத்த அறிக்கைக்கு அன்வார் பதில் அளித்தார்.
“என்னை விட அதிகமான சிரமங்களை எதிர்நோக்கும் மக்கள் இருப்பதை நான் அறிவேன். அல்லும் பகலும் நான் சபிக்கப்படுகிறேன்.”
“நான் பயணம் செய்யும் போது என்னுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. நான் நடந்து செல்லும் போது எனக்கு மெய்க்காவலர்கள் தேவைப்படுகின்றனர். காரணம் பல மோசமான மனிதர்கள் உள்ளனர்.’
“நான் அது குறித்து ஆத்திரமடையக் கூடாது, ஏனெனில் பிசாசுகள் இருப்பதை மகாதீர் ஏற்கனவே ஒப்புக் கொண்டு விட்டார்,” என அவர் சொன்ன போது பல இன மக்களையும் கொண்ட கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.