பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், மலாக்கா ஜாசினில் நேற்று தமது மெய்க்காவலர் துப்பாக்கியைக் காட்டியதாகக் கூறப்படும் சம்பவம் மீது நடு நிலையை எடுத்துள்ளார்.
கோலாலம்பூரில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், பிகேஆர் பஸ்ஸை வழி மறித்தவர்கள் தம்மை மருட்டியதாக தமது மெய்க்காவலர் தம்மிடம் தெரிவித்தார் எனச் சொன்னார்.
“தாம் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றியதாகவும் அந்தக் குண்டர் கும்பல் முழுவதும் தம்மை நோக்கி வந்த போது தாம் மருட்டப்பட்டதாகவும் மெய்காவலர் குறிப்பிட்டார்.”
“நான் போலீசாரிடம் விட்டு விடுகிறேன். அந்தப் பாதுகாவலர், சுய தற்காப்புக்காக வழக்கமான நடைமுறைகளுக்கு ஏற்ப துப்பாக்கியைக் காட்ட முயன்றாரா இல்லையா என்பதே இங்கு முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம்,” என பந்தாய் டாலாமில் பிகேஆர் ஏற்பாடு செய்திருந்த திறந்த இல்ல உபசரிப்பின் போது நிருபர்களிடம் கூறினார்.
மெய்க்காவலர் கைத்துப்பாக்கியை தமது பின்பக்க உறைக்குள் வைப்பதற்கு முன்னர் சாதாரண உடையில் இருந்த இரண்டு போலீஸ்காரர்கள் அவரை பிடித்துக் கொண்டதாக நேற்று என்டிவி 7 தொலைக்காட்சியின் மண்டரின் மொழி செய்தி அறிக்கையில் கூறப்பட்டது.
அடுத்து அந்த மெய்க்காவலர் தடுத்து வைக்கப்பட்டு அதே இடத்தில் அவரது கைத்துப்பாக்கியிலிருந்து ரவைகள் அகற்றப்பட்டன.
நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்காக அந்த பிகேஆர் பிரச்சாரப் பஸ் கம்போங் ரிம்-க்கு சென்று கொண்டிருந்த போது 20 பேர் அதனை வழி மறித்தனர். அந்தப் பஸ் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டது.
அந்தக் கைத்துப்பாக்கிக்கு அனுமதி இருந்ததாக அன்வார் வலியுறுத்தினார்.
“கூச்சலிட்டவர்கள் மீது மெய்க்காவலர் துப்பாக்கியைக் காட்டவில்லை”
கூச்சலிட்டவர்கள் மீது தமது மெய்க்காவலர் துப்பாக்கியைக் குறி வைத்ததாகக் கூறப்படுவதை மறுத்த அன்வார், அது அந்தச் சம்பவம் மீது ‘அம்னோ- பெர்க்காசா தரப்பு வழங்கும் கதை’ என்றார்.
“அவர்கள் அதற்கு முன்னதாக எங்களை அரை மணி நேரத்துக்குத் தாக்கினர். அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. படங்களும் உள்ளன.”
“அவர்கள் எங்களைத் தாக்கினர். அவர்கள் பஸ்ஸை நிறுத்தினர். நாங்கள் உண்மையில் பஸ்ஸைத் தவிர்க்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அந்தச் சம்பவத்தை நாங்கள் தூண்டி விட்டதாக அவர்கள் கூறுகின்றனர்,” என்றும் அன்வார் சொன்னார்.
தமக்குப் பாதுகாப்பு தேவைப்படுவதாக குறிப்பிட்ட அவர், பக்காத்தான் நிகழ்வுகளின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் இன்னும் மறுத்து வருவதால் தமக்கு வேறு வழி இல்லை என்றார்.
“கடந்த சில மாதங்களாக நிகழ்ந்துவரும் அந்தச் சம்பவங்கள் தொடர்பில் அம்னோ அல்லது பெர்க்காசா ஆட்களில் யாரும் கைது செய்யப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது.”
“அது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் ஆகியோரது திறமைக் குறைவையும் பொறுப்பற்ற தன்மையையும் காட்டுகிறது,” என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
அந்த அச்சுறுத்தல்கள் விரக்தியின் விளைவுகள் என வருணித்த அவர், அவை திருப்பி அடிக்கும் என்றும் பொது மக்களுடைய கருத்துக்களைத் திசை மாற்றி விடும் என்றும் எச்சரித்தார்.