சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் கணக்காய்வு முடிவுகளை மாநில அரசாங்கம் இன்னும் இரண்டு வாரங்களில் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் வெளியிடுவார் என மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் எலிசபத் வோங் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் அனைத்து மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆய்வுகளை நடத்தினோம். அது மாறுபட்ட தகவலாக இருக்கும்,” என்றார் அவர்.
தமது புக்கிட் லஞ்சான் தொகுதியில் மட்டும் ‘Selangorku Bersih’ இயக்கத்தின் கீழ் 13,000 புதிய வாக்காளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
ஆனால் அவர் மேல் விவரங்களைத் தருவதற்கு மறுத்து விட்டார்.
“நீங்கள் காத்திருக்க வேண்டும்,” என அவர் சுபாங் பெர்டானாவில் பிகேஆர் சுபாங் நடத்திய நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் வோங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
சிலாங்கூரில் புதிய வாக்காளர் பதிவுகள் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து வாக்காளர்களை சரி பார்க்கும் நடவடிக்கை நடத்தப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் சிலாங்கூர் மாநில அரசாங்கம் அறிவித்தது.
தண்ணீர் சலுகையைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனத்தின் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள சிலாங்கூர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கின்றன என்றும் வோங்-கிடம் வினவப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த அவர், இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பு சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டர் சின் -னிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை எனத் தெரிவித்தார்.
“அவர் எங்களுக்கு பதில் அளிக்க வேண்டும். அவர் அதனை நிராகரித்தால் காரணம் சொல்ல வேண்டும். எங்காவது ஒரிடத்தில் வைத்து விட்டு அதனை மறந்து விடக் கூடாது. தங்களுக்கு ஏதும் கிடைக்காதது போல அவர்கள் பாசாங்கு செய்கின்றனர்,” என்றார் அவர்.
தண்ணீர் சலுகை நிறுவனங்களை சிலாங்கூர் அரசாங்கம் ஏற்றுக் கொள்வதற்கு உதவி செய்ய கூட்டரசு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஆகஸ்ட் 31ம் தேதி சின் சொன்னதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
“சிலாங்கூர் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள முடியுமானால் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. நாங்களும் அதனுடன் சேர்ந்து கொள்வோம். ஆனால் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சட்டங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும்,” என அவர் கூறியதாகவும் அறிவிக்கப்பட்டது.