ஆத்திரமுற்ற அங்காடிக்காரர்கள் மலேசியாகினிமீது பாய்ச்சல்

நேற்று பினாங்கு எஸ்பிளேனேட்டின் பேச்சாளர் மூலையில் அமைதியாக நடந்துகொண்டிருந்த உள்ளூர் ஜனநாயக விழாவில் சில அங்காடிக்கார்கள் புகுந்து குழப்பத்தை விளைவித்தனர். அவர்களின் பேராளர்களில் ஒருவர் மலேசியாகினியையையும் அதன் செய்தியாளரையும் திட்டுத்திட்டென்று திட்டித் தீர்த்தார்.

தம்மைப்  பாதிக்கப்பட்ட அங்காடிக்காரர்களின் பிரதிநிதி என்றும் பெர்சாத்துவான் மூக்காபுக்கா பூலாவ் பினாங் (Persatuan Mukabuka Pulau Pinang)கைச் சேர்ந்தவர் என்றும் கூறிக்கொண்ட சாலே இஸ்மாயில் என்பார், இந்தச் செய்தியைத் “திரித்துக் கூறவேண்டாம்” என்று  மலேசியாகினி செய்தியாளரை நோக்கி உரக்கக் கூவினர்.

ஒரு கட்டத்தில் அந்தச் செய்தியாளரை மிகவும் நெருங்கி சென்ற அவர், தன் முஷ்டியை அவரது முகத்துக்கு நேராக உயர்த்திக் காண்பித்து மலேசியாகினி என்றாவது அங்காடிக்காரர்களின் துன்பங்களை எடுத்துரைத்தது உண்டா என்று வினவியதுடன் அந்த இணையச் செய்தித்தளம்,“நெறிமுறையற்றது, கதைகட்டுவதையே வழக்கமாகக் கொண்டது”என்றும் சாடினார்.

“ஒவ்வொரு நாளும் 700,000 பேர் உங்கள் தளத்து வருகிறார்கள். என்றாவது நீங்கள் அங்காடிக்காரர்களின் வேதனைகளை எடுத்துரைத்ததுண்டா”, என்று சத்தமிட்டார்.

கடந்த வாரம், செப்டம்பர்4-இல் இதே குழுவினர், ஜாலான் பட்டாணியில் நடைபெற்ற மாநில டிஏபியின் ஹரி ராயா உபசரிப்பு நிகழ்வுக்குச் சென்று, சுற்றுப்பயணிகள் அதிகம் வருகை புரியும் எஸ்பிளேனேட்டில் தாங்கள் வியாபாரம் செய்ய பினாங்கு முனிசிபல் மன்றம்(எம்பிபிபி) அனுமதி அளிக்காதது குறித்து ஆட்சேபணை தெரிவித்தனர்.

சுமார் 20பேர் அடங்கிய அக்குழுவில் பினாங்கில் ஆர்ப்பாட்டங்களில் அடிக்கடி கலந்துகொள்ளும் சாலே போன்றவர்களே பெரும்பாலும் இடம்பெற்றிருந்தார்கள். அவர்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பிச் செல்ல முனைந்த மாநில அரசின் அதிகாரிகளின் கார்களைத் தாக்கினர்.

கொம்டார் சட்டமன்ற உறுப்பினரும் முதலமைச்சர் லிம் குவான் எங்கின் அரசியல் செயலாளருமான இங் வை எய்க், தம் கார் தாக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்தார்.

சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 100மீட்டர் தொலைவில்தான் வடகிழக்கு போலீஸ் தலைமையகம் இருக்கிறது. ஆனாலும் போலீசார் ஒரு மணி நேரம் கழித்துத்தான் வந்தனர்.

நேற்று பேச்சாளர் மூலைக்கு திடீரென்று வந்துசேர்ந்த அங்காடிக்காரர்கள் அந்நிகழ்விலும், அதில் மாநில அரசின் சார்பில்  கலந்துகொண்டிருந்த ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோவுடனும்  பேச விரும்புவதாகக் கூறினர்.

அந்நிகழ்வில் பேச அவர்கள் ஏற்பாட்டாளர்களின் அனுமதி பெற வேண்டும் என தஞ்சோங் எம்பியுமான செள தெரிவித்தார். ஆனால், அக்குழுவினர் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் கருத்துகளைக் கூறத் தொடங்கினர்.

அதைக் காணப் பொறுக்காத மூத்த குடிமகன் ஒருவர் அவர்களை நோக்கிச் சத்தமிட்டார்.அவரை மற்றவர்கள் அமைதிப்படுத்தினர்.

செள அந்த இடத்தைவிட்டுப் புறப்பட முனைந்தபோது அங்காடிக்காரர்கள் அவருடன் பேச விரும்புவதாகத் தெரிவித்தனர்.அதற்கு அவர், “நாம்தான் பல தடவை சந்தித்திருக்கிறோமோ”, என்று பதிலளித்தார்.

பின்னர் சாலே, கூட்டத்தினரை நோக்கிப் பேசினார். கடந்த மாதம் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் மாலிக் அபுல் காசிமைச் சந்திக்க முயன்றதாகக் கூறினார்.

“வரும் திங்கள்கிழமை (செப்டம்பர்4) அப்துல் மாலிக்கைச் சந்திக்கலாம் என்றார்கள்.ஆனால், அவர் வரவில்லை.ஐந்து மணி நேரம் காத்திருந்தும் அவரைக் காணவில்லை”, என்றார் சாலே.

“அதனால்தான் அன்று மாலை டிஏபியின் ஹரி ராயா பொது உபசரிப்புக்குப் போனோம்.முறையாகத்தான் சென்றோம்.மாலிக்கைப் பார்க்க விரும்பினோம்.ஆனால், எங்களைத் திருப்பி அனுப்பினார்கள்”.

பெர்காசா ஆதரவு இல்லை என மறுப்பு

மாநில அதிகாரிகளின் கார்களைத் தாக்கியது பற்றி விசாரித்ததற்கு,எஸ்பிளேனேட்டில் தொழில்செய்ய உரிமம் கேட்பதற்காகக் குழுவினர் கார்களை நிறுத்தத்தான் முயன்றார்களே தவிர தாக்கவில்லை என சாலே கூறினார்.

அதே அதிகாரிகள் 2008 தேர்தலுக்குமுன் ஆதரவு கேட்டு தங்களை நாடி வந்தவர்கள்தாம் என்றும் அவர் சொன்னார்.

“அதனால் அவர்களின் கார்களை நிறுத்தி அவர்களுடன் பேச முயன்றதில் என்ன தப்பு?”, என்றவர் வினவினார்.

அங்காடிக்காரர்கள் பெர்காசா ஆதரவில்தான் அப்படியெல்லாம் நடந்துகொள்வதாகக் கூறப்படுவதை சாலே வன்மையாக மறுத்தார்.

தங்கள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை மணி ஆறிலிருந்து இரவு 7.30வரை எஸ்பிளேனேட்டில் சேவை மையம் ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும் சாலே தெரிவித்தார். புகார் செய்ய விரும்பும் அங்காடிக்காரர்கள் அதில் புகார்களைப் பதிவு செய்யலாம்.