பாஸ் துணைத் தலைவர் மாட் சாபுவை, துருக்கிய வரலாறு குறித்து துணிச்சலாகப் பேசிய நோபள் பரிசு பெற்ற அந்த நாட்டு இலக்கியவாதியான ஒர்ஹான் பாமுக்-குடன் பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
“நோபள் பரிசு பெற்றவரான ஒர்ஹான் பாமுக் முதலாவது உலகப் போரின் போது ஆர்மினியர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து பேசியதற்காக அவர் மீது துருக்கியில் வழக்குத் தொடரப்பட்டது.”
“அவர் சொன்னது முற்றிலும் உண்மை. அந்தப் படுகொலையின் போது ஆர்மினிய மக்கள் இறந்தனர். அவர் மீது வழக்குப் போடப்பட்டது,” என்றார் அவர்.
கோலாலம்பூரில் நேற்றிரவு பிரபல கல்வியாளரான குவா கியா சூங் எழுதியுள்ள “விசுவாசிகளும் பாசாங்கு செய்கின்றவர்களும்: மலாயா சுதந்திர வரலாறு” ( Patriot and Pretenders: The Malayan Independence Struggle) என்னும் தலைப்பைக் கொண்ட புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சுரேந்திரன் பேசினார்.
“ஒப்புமையைப் பாருங்கள், 1950ம் ஆண்டு புக்கிட் கெப்போங் விஷயத்தை பற்றி மாட் சாபு பேசுகிறார். அவர் மீது வழக்குத் தொடுக்கப்படுகிறது. 1915ம் ஆண்டு ஆர்மினியப் படுகொலை குறித்து ஒர்ஹான் பாமுக் பேசினார். அவர் மீது வழக்குப் போடப்பட்டது. ஆகவே மாட் சாபுக்கு நல்ல உற்ற தோழர் இருக்கிறார்,” என்றார் சுரேந்திரன்.
1950ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தை தற்காத்த போலீஸ் அதிகாரிகளுக்கும்-மரணமடைந்தவர்கள்- அவர்களுடைய குடும்பங்களுக்கும் கிரிமினல் ரீதியாக அவமானம் ஏற்படுத்தியதாக மாட் சாபு மீது கடந்த புதன் கிழமை குற்றம் சாட்டப்பட்டது.
புக்கிட் கெப்போங் மீது தாக்குதலை நடத்திய முகமட் இந்ராவை சுதந்தரப் போராட்ட வீரர் என ஆகஸ்ட் 21ம் தேதி நிகழ்த்திய உரையில் மாட் சாபு பாராட்டியிருந்தார்.
காலனித்துவ கால கட்டத்தில் நிகழ்ந்த அந்தச் சம்பவத்தின் போது போலீஸ் அதிகாரிகள் பிரிட்டிஷ் மகுடத்திற்கு சேவை செய்ததாக அவர் தமது கூற்றுக்கு நியாயம் கற்பித்தார்.
நாட்டின் உண்மையான வரலாறு பற்றிய ஆர்வத்தை மக்களிடையே மாட் சாபு துண்டி விட்டுள்ளார் என அந்த பிகேஆர் உதவித் தலைவர் சொன்னார்.
“நான் நாடு முழுவதும் அரசியல் சொற்பொழிவுகளுக்காக சென்று கொண்டிருக்கிறேன். விலை ஏற்றம், அரசாங்க அமைப்புக்கள் தவறாக பயன்படுத்தப்படுவது பற்றி மட்டுமே முன்பு பேசப்படும். இப்போது 50 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களும் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.”