13வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நிகழாது என பினாங்கு அம்னோ தலைவர் ஒருவர் உறுதியாக நம்புகிறார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோ மீது அக்கறையும் பரிவும் கொண்டிருப்பதால் தமது முழுத் தவணைக் காலத்தையும் முடிக்க எண்ணம் கொண்டுள்ளார் என பாயான் பாரு அம்னோ தலைவர் அப்துல் ரஹிம் சாயுபு கூறினார்.
தமது தொகுதியைச் சார்ந்த இளைஞர் பேராளர்கள் தேர்தலுக்கான தங்கள் வியூகங்களைத் தயாரிப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக அவர் சொன்னார்.
அதன் வழி தேர்தலுக்கான மாதம், தேதி பற்றிய கேள்விகளுக்கு அப்துல் ரஹிம் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
பாயான் பாரு அம்னோ இளைஞர் பிரிவின் ஆண்டுப் பேராளர் கூட்டத்தையும் பொதுத் தேர்தல் எந்திரத்தையும் மாநில அம்னோ இளைஞர் தலைவர் ஷேக் ஹுசேன் மைதின் தொடக்கி வைத்த நிகழ்வில் அவர் பேசினார். அதில் மொத்தம் 300 பேர் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்வில் பிஎன் உறுப்புக் கட்சிகளின் இளைஞர் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
“பொதுத் தேர்தல் பெரும்பாலும் சீனப் புத்தாண்டுக்குப் பின்னர் நிகழக்கூடும். ஆனால் எங்களுக்கு எந்தத் தேதி என்பது தெரியாது.”
“நஜிப் நம்மைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டுள்ளார். தேர்தலை நடத்துவதற்கு முன்னர் நாம் சரியான முறையில் ஏற்பாடுகள் செய்திருப்பதை அவர் உறுதி செய்து கொள்வார். அவர் நம்மைப் பரிவுடன் நோக்குகிறார். தேர்தலை அறிவிக்கும் முன்னர் நாம் நன்றாக இயங்குவதைக் காண அவர் விரும்புகிறார்.”
தேர்தல் நவம்பர் மாதம் நடத்தப்படுவதை தாம் விரும்புவதாக கடந்த வாரம் அம்னோ/பிஎன் தலைவருமான நஜிப் கோடி காட்டியிருந்தார். 11 அவருடைய விருப்பமான எண் ஆகும்.
தான் 100 விழுக்காடு ஆயத்தமாக இருப்பதாக பக்காத்தான் ராக்யாட்டும் அறிவித்துள்ளது.
என்றாலும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் சாத்தியத்தை பாயான் பாரு பிஎன் ஒருங்கிணைப்பாளருமான அப்துல் ரஹிம் நிராகரித்தார்.
மலேசியாவில் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் ஆகிய முக்கியமான தேர்வுகள் ஆண்டின் கடைசி இரு மாதங்களில் நடைபெறுகின்றன.
மலாய் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள கிழக்குக் கரையில் அந்த இரு மாதங்களில் கடுமையாக பருவ மழை பெய்யும் போது வெள்ளம் ஏற்படுவதும் வழக்கமாகும்.