நெகிரி செம்பிலான் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கூடாரங்கள் அமைக்கப்பட்டது அவர்களை பிரித்து வைக்கும் நோக்கத்தைக் கொண்டது எனக் கூறப்படுவதை பாஸ் இன்று மறுத்துள்ளது.
வருகையாளர்களுடைய சௌகரியத்தைக் கருத்தில் கொண்டு அவ்வாறு செய்யப்பட்டதாக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி சொன்னார்.
“நாங்கள் எங்கள் நிகழ்வுகளில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைப்பது இல்லை. அது பிரித்து வைப்பது அல்ல. கூடாரங்களில் மக்கள் எளிதாக நடமாடுவதற்கு உதவியாக அவ்வாறு செய்யப்பட்டது.”
“கணவரும் மனைவியும் ஒன்றாக அமர விரும்பினால் எந்தப் பிரச்னையும் இல்லை,” என கோலாலம்பூரில் இன்று பக்காத்தான் ராக்யாட் செயலாளர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் முஸ்தாபா நிருபர்களிடம் கூறினார்.
‘சௌகரியம்’ என அவர் சொல்வதற்கான அர்த்தத்தை விளக்குமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதற்கு மறுமொழி கூறிய முஸ்தாபா,” வருகையாளர்கள் எளிதாக உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதற்கே அந்த ஏற்பாடு,” என்றார்.
அத்தகைய ஏற்பாடுகள் பாஸ் கட்சிக்கு வழக்கமானவை என மேலும் தெரிவித்த அவர், நெகிரி செம்பிலான் திறந்த இல்ல உபசரிப்புக்கு ஊடகங்கள் தவறான விளக்கம் கொடுத்து விட்டதாக குறிப்பிட்டார்.
அவ்வாறு தனித்தனி கூடாரங்கள் அமைக்கப்பட்டது “தேவையற்றது, தவறானது” என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறியதாக தி ஸ்டார் நாளேடு இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்குப் பதில் அளிக்குமாறும் முஸ்தாபாவிடம் வினவப்பட்டது.
அதற்கு அவர் “அது ஒரு பிரச்னையே அல்ல,” என்றார்.
“கர்பாலுக்கு என்ன தகவல் கிடைத்தது என்பது எனக்குத் தெரியாது. என்றாலும் நெகிரி செம்பிலான் திறந்த இல்ல உபசரிப்பு பற்றிய செய்தி சரியானது அல்ல. அது தான் வழக்கமாக இருந்து வந்துள்ளது.”
கடந்த சனிக்கிழமை டாத்தாரான் செனாவாங்கில் பாஸ் தனது நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பை நடத்தியது.