சரவாக் தடையை அகற்ற அம்பிகா மேற்கொண்ட இறுதி முயற்சி தோல்வி

பெர்சே இணைத்தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், சரவாக்கிற்குள் தாம் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கான இறுதி முயற்சியில் தோல்வி கண்டுள்ளார்.

அந்தத் தடை மீது நீதித் துறை மறு ஆய்வு செய்வதற்கு அனுமதி கோரி அவர் சமர்பித்திருந்த விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்துள்ளதே அதற்குக் காரணமாகும்.

அவரது விண்ணப்பத்தை அகமட் சுல்கிப்லி மாக்கினுடின், அப்துல் ஹமிட் எம்போங், சுரியாடி ஹலிம் ஒமார், அகமட் மாருப், ஸாலேஹா ஸாஹாரி ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழு அம்பிகா விண்ணப்பத்தை ஏகமனதாக நிராகரித்தது.

சபா, சரவாக் உயர் நீதிமன்றத்தில் தாம் விண்ணப்பித்திருக்க வேண்டும் என தீர்ப்பளித்த பின்னர் தமது விண்ணப்பத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக அம்பிகா சொன்னார்.

1964ம் ஆண்டுக்கான நீதிமன்றங்களில் நீதிபரிபாலனச் சட்டத்தின் 96வது பிரிவின் தேவைகளையும் அவர் பூர்த்தி செய்யத் தவறி விட்டதாகவும் நீதிமன்றம் கூறியது.

சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்துக்கு 5,000 ரிங்கிட்டும் சரவாக் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு 5,000 ரிங்கிட்டும் செலவுத் தொகையாக கொடுக்குமாறும் அம்பிகாவுக்கு உத்தரவிடப்பட்டது.

“சட்டத்துறைத் தலைவரும் சரவாக் சட்டத்துறைத் தலைவரும் தலா 10,000 ரிங்கிட் கோரியிருந்தனர்.   ஆனால் அவர்களுக்கு தலா 5,000 ரிங்கிட் மட்டுமே நீதிமன்றம் வழங்கியது,” என தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் சொன்னார்.

“உயர் நீதிமன்றமோ அல்லது முறையீட்டு நீதிமன்றமோ செலவுத் தொகையைக் கொடுக்குமாறு உத்தரவிடவில்லை. நான் மட்டுமே வழக்கைத் தொடுத்துள்ளேன். வரி செலுத்தும் பிரஜை.”

சரவாக்கிற்குள் நுழைவதற்கு தமக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வழக்கை சமர்பிக்க முடியாத ‘நிலையில்’ தாம் இருப்பதை நீதிமன்றத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறி விட்டதாகவும் அந்த முன்னாள் வழக்குரைஞர் மன்றத் தலைவர் சொன்னார்.

“அங்கு நான் என் வழக்குரைஞர்களை காணவும் முடியாது. நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவும் முடியாது. நீதிமன்றம் அதனைப் பரிசீலித்திருக்க வேண்டும். வழக்குத் தொடுப்பவர் தமது சொந்த வழக்கை விசாரிக்க முடியாது.”

தவற விட்டு விட்ட வாய்ப்பு

மேற்கு மலேசியாவில் பிறந்த குடிமக்கள் சபா, சரவாக்கிற்கு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள மாறுபட்ட விதிகளை மறு ஆய்வு செய்வதற்கு கிடைத்த ‘வாய்ப்பை நீதித்துறை நழுவ விட்டு விட்டதாகவும் அம்பிகா குறிப்பிட்டார்.

“அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் போனது மிகவும் வருத்தமாக இருக்கிறது.”

சரவாக்கிற்குள் நுழைவதற்கு தமக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து வழக்காடுவதற்கு அனுமதி கொடுக்க உயர் நீதிமன்றம் மறுத்த பின்னர் அம்பிகா முதலில் முறையீட்டு நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சரவாக் தேர்தல்கள் நிகழ்ந்த போது அந்த மாநிலத்துக்குள் நுழைய அம்பிகா அனுமதிக்கப்படவில்லை. பெர்சே கூட்டணியில் ஒர் அங்கமாக அவர் அந்தத் தேர்தல்களை கண்காணிக்க அங்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

தேர்தலுக்காக மேற்கு மலேசியாவிலிருந்து அந்த மாநிலத்துக்குள் நுழைய பெர்சே-யைச் சேர்ந்த மற்றவர்களும் எல்லாத் தரப்புக்களையும் சார்ந்த அரசியல்வாதிகளும் அனுமதிக்கப்பட்டதால்  தாம் ‘பாரபட்சமாக’ நடத்தப்பட்டுள்ளதாக உணருவதாகவும் அம்பிகா மேலும் சொன்னார்.

“சரவாக்கில் தடையை எதிர்த்து வழக்காடுவதற்கு இப்போது மிகவும் கால தாமதமாகி விட்டது. இனிமேல் எந்த வழியும் இல்லை. இப்போதைக்கு எனக்கு மழைக் காடு இசை விழா அல்லது முலு குகைகளோ இல்லை.”

“அந்த தடை நீக்கப்படுவதைக் காண்ட நான் காத்திருக்க வேண்டும். ஆனால் அதனை அறிந்து கொள்ள மீண்டும் அந்த மாநிலத்துக்குள் நுழைய முயற்சி செய்ய வேண்டும்,” என்றார் அவர்.

தமக்காக இலவசமாக வாதாடிய வழக்குரைஞர்களான டோமி தாமஸ், ஜேம்ஸ் கொங் ஆகியோருடைய சேவைகளுக்கும் அம்பிகா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 

TAGS: