கல்வி மீது நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமையுங்கள் என லிம் கிட் சியாங் வலியுறுத்து

மூன்று கல்விப் பெருந்திட்டங்கள் வெளியிடப்பட்ட போதிலும் மலேசியாவின் கல்வித் தரம் தொடர்ந்து சரிந்து வருவதாக டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார்.

ஆகவே கல்வி மீது பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்குமாறு அவர் பிரதமரைக் கேட்டுக் கொண்டார். அந்தப் பூர்வாங்க மலேசிய கல்விப் பெருந்திட்டம் மீது அறிக்கை வழங்க பிஎஸ்சி-க்கு மூன்று மாத அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

“கடந்த 13 ஆண்டுகளில் மலேசியாவுக்கு மூன்று கல்வி அமைச்சர்கள் இருந்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் கல்விப் பெருந்திட்டத்தை வழங்கியுள்ளனர். ஆனால் அந்த இடைவெளியில் மலேசியக் கல்வித் தரம் மோசமான நிலையிலிருந்து படு மோசமான நிலைக்கு தாழ்ந்துள்ளது.”

“1999ம் ஆண்டுக்கு பின்னர் இரண்டு முன்னாள் கல்வி அமைச்சர்கள் வழங்கிய இரண்டு முன்னாள் கல்விப் பெருந்திட்டங்களும் ஏன் எதிர்மாறான விளைவுகளைத் தந்துள்ளன என்பதைக் கண்டறிவது, கல்வி மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்,” என லிம் விடுத்த அறிக்கை கூறியது.

அந்த பெருந்திட்டம் பொது மக்களுடைய கருத்துக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. அது டிசம்பர் மாதம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும். 2013ம் ஆண்டு தொடக்கம் 2025ம் ஆண்டு வரைக்குமான நாட்டின் கல்வித் திட்டங்களை அது கொண்டுள்ளது.

பள்ளிக்கூட நேரத்துக்குப் பிந்திய நிவாரண வகுப்புக்கள் வழி ‘ரிமூவ்’ வகுப்புக்களை அகற்றுவதும்அந்தத் திட்டத்தில் அடங்கும். ஒவ்வொரு மாணவரும் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். அந்தத் திட்டம் அமலாக்கப்படுவதை கல்வி நடவடிக்கைப் பிரிவு கண்காணிக்கும்.

இதனிடையே அந்த பெருந்திட்டத்தில் ஐந்து முக்கியமான அம்சங்கள் காணப்படவில்லை என அஸ்லி பொதுக் கொள்கை ஆய்வு மய்யத் தலைவர் ரேமன் நவரத்னம் கூறியுள்ளார்.

அவற்றைச் சரி செய்யா விட்டால் ‘இன ரீதியாக வேறுபடுவது அதிகரித்து தேசிய ஒற்றுமை மேலும் சீர்குலையும்’ என அவர் எச்சரித்தார்.

அவை வருமாறு:

தாய் மொழிப் பள்ளிக்கூடங்களில் பாஹாசா மலேசியா, ஆங்கில் மொழி ஆற்றலை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள், அவை முறையாக அமலாக்கப்படுவதற்காக வெளியிடப்பட வேண்டும்.

ஆசிரியர்களிடையே ‘இனச் சமநிலையை’ பராமரிக்க வேண்டிய அவசியம் பற்றி எதுவும் கூறப்படவில்லை.

பள்ளிக் கூடங்களில் காணப்படுகின்ற ஒரே இன சூழ்நிலைகள் பற்றி போதுமான அளவுக்கு சுட்டிக்காட்டப்படவில்லை அல்லது அதற்கான தீர்வும் வழங்கப்படவில்லை.

நாடு முழுவதும் உள்ள 20 வகையான பள்ளிக்கூடங்கள் பற்றி முழுமையான புள்ளி விவரங்கள் போன்ற ‘கணிசமான புள்ளி விவரங்கள்’ முந்திய பெருந்திட்டங்களை போல அல்லாமல் அந்த ஆவணத்தில் காணப்படவில்லை.

‘தேசிய வகை’ பள்ளிக்கூடங்கள் எப்படி முழு உதவி பெறும் பள்ளிகளாகவும் தேசியப் பள்ளிகளாக இணைக்கப்படும் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஆகவே இந்த சூழ்நிலையில் சாதாரண குடிமக்களும் பெற்றோர்களும் தெரிவித்த பல குறைகள் சில கல்வி நிபுணர்களினாலும் அந்நிய மற்றும் உள்நாட்டு ஆலோசகர்களினாலும் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக
அஸ்லி பொதுக் கொள்கை ஆய்வு மய்யம் கருதுவதாக அவர் சொன்னார்.