மஇகா: கோயில் திருட்டு புகார் மீட்டுக் கொள்ளப்படுவதற்கு டிஏபி உத்தரவிட்டது

டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், கோயில் நிதிகள் திருடப்பட்டதாக கூறப்படுவது மீதான  போலீஸ் புகாரை மீட்டுக் கொள்ளுமாறு பினாங்கு இந்து அற வாரியத்தின் துணைப் பொருளாளருக்கு உத்தரவிட்டதின் மூலம் ‘அதிகார துஷ்பிரயோகம்’ செய்துள்ளதாக பினாங்கு மாநில மஇகா குற்றம் சாட்டியுள்ளது.

போலீஸ் புகாரை மீட்டுக் கொள்ளுமாறு ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் உத்தரவிட்ட விஷயத்தில் பினாங்கு இந்து அறவாரியத்தின் தலைவருமான  இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமி வெறும் ‘பொம்மையை’ போல நடந்து கொள்வதாகவும் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜே தினகரன் சாடினார்.

“அந்த திருட்டு சம்பவத்தில் ராயர் ஏன் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு போலீஸ் புகாரை மீட்டுக் கொள்ளுமாறு உத்தரவிடுகிறார் ?” என தினகரன் ஜார்ஜ் டவுனில் உள்ள மாநில மஇகா தலைமையகத்தில் நடத்திய நிருபர்கள் சந்திப்பில் வினவினார்.

“மக்களுக்குச் சொந்தமான கோயில் நிதிகளைத் திருடுவது சாதாரணமானது, அதனை அமைதியாக மன்னித்து விடலாம் என்ற செய்தியை அனுப்ப ராயர் முயற்சி செய்கிறாரா ?”

“ராயர்  நடவடிக்கை எடுத்து வாரியத்தின் நடப்புத் தலைவரைக் காட்டிலும் அதிக வலிமை உள்ளவராகக் காட்டிக் கொண்டிருப்பதால் பினாங்கு இந்து அறவாரியத்தில் அவர் கிங் மேக்கரா ?” (எதனையும் செய்யக் கூடியவர்) என்றும் தினகரன் கேள்வி எழுப்பினார்.

செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி ஸ்ரீ பால தெண்டாயுதபாணி கோயிலில் உண்டியல் பணத்தை சுறுசுறுப்பாக எண்ணிக் கொண்டிருந்த வேளையில் பினாங்கு இந்து அறவாரியத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் கோயிலுக்குச் சொந்தமான 10,935 ரிங்கிட்டுடன் ஒட முயன்றதாக கூறப்பட்டது.

40 வயதான அந்த நபர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு புலாவ் திக்குஸ் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு இந்து அற வாரிய உறுப்பினர் ஒருவர் புகார் செய்தார்.

அதற்கு அடுத்த நாள் “ராயரின் உத்தரவுக்கு இணங்க” போலீஸ் புகாரை அந்த வாரிய உறுப்பினர் மீட்டுக் கொண்டதாக தினகரன் கூறினார்.

பக்கத்தான் ரக்யாட் மாநில அரசாங்கத்தின் கீழ் இது பினாங்கு இந்து அறவாரியம் சம்பந்தப்பட்ட இரண்டாவது சம்பவமாகும். முதல் சம்பவத்தில் ரிம68,000 திருடப்பட்டது.

இதனிடையே தொடர்பு கொள்ளப்பட்ட போது போலீசில் புகார் செய்த நபர் அதனை எப்படித் தொடருவது என தம்மிடம் வினவியதாக ராயர் சொன்னார்.

“பணத்தைத் திருட முயன்ற மனிதர் பிடிக்கப்பட்டாரா என நான் அவரிடம் வினவினேன், அவர் ஆமாம் என்றார். பணம் மீட்கப்பட்டு விட்டதா என அடுத்து நான் கேட்டேன். அதற்கும் அவர் ஆமாம் என்றார். பிடிபட்ட மனிதர் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டாரா என்றும் நான் கேட்டேன். அதற்கும் அவர் ஆமாம் எனப் பதில் அளித்தார்,” என ராயர் மலேசியாகினியிடம் சொன்னார்.

“அவர் தமது பினாங்கு இந்து அற வாரிய வேலையிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். ஆகவே நீங்கள் ஏன் அந்த விவகாரத்தை தொடர விரும்புகின்றீர்கள் என நான் அந்த உறுப்பினரைக் கேட்டேன். மனிதநேய அடிப்படையில் நாம் அந்த விவகாரத்தைத் தொடரக் கூடாது,” என வழக்குரைஞருமான ராயர் தெரிவித்தார்.

திருட்டில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நபரின் குடும்பத்தினரும் அந்த விவகாரம் மீது பினாங்கு இந்து அற வாரியத்துக்கு முறையீடு செய்து கொள்வர் என்றும் ராயர் கூறினார்.

இன்னொரு நிலவரத்தில் மலேசியாகினி எழுப்பிய கேள்விகளுக்கு குறுஞ்செய்தி வழி பதில் அளித்த ராமசாமி போலீஸ் புகார் பற்றியும் சம்பந்தப்பட்ட நபர் அதனை மீட்டுக் கொண்டதும் தமக்குத் தெரியும் எனச்  சொன்னார்.

கோயில் பணத் திருட்டில் சம்பந்தப்பட்ட தனிநபர் “நீக்கப்பட்டுள்ளார்” என்றும் ராமசாமி தெரிவித்தார்.

TAGS: